For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களை சோனியா ஏமாற்ற முடியாது: வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தமிழர்களை முட்டாள்களாக்க்கி விடலாம் என்று கருதிக்கொண்டு, இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக, சோனியா காந்தி கருணாநிதிக்கு, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கடிதம் எழுதியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இரண்டாம் உலகப் போரின்போது, உலக மக்களையும், தனது நாட்டு ஜெர்மானிய மக்களையும் ஏமாற்றுகின்ற வேலையில், கோயபெல்ஸ் ஈடுபட்டதை நினைவு கூர்கின்ற வகையில், கருணாநிதிக்கு, சோனியா காந்தி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

கடந்த அக்டோபர் 9ம் தேதி, சென்னை விமான நிலையத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம், முதலமைச்சர் கருணாநிதி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.

அதில் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு சோனியா, கருணாநிதிக்கு ஒரு பதில் கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில், இலங்கையில், முகாம்களில் உள்ள 30,000 ஈழத் தமிழ் மக்கள் மறு குடிஅமர்வுக்குத் தேவையான உதவிகளையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், மத்திய அரசு அளித்து வருவதாகவும், தமிழ் மக்களுக்கு மறு கட்டமைப்புப் பணிகள் தொடர்பாக, இலங்கை அரசோடு இந்திய அரசு பேசி வருவதாகவும், சோனியா குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

2008ம் ஆண்டிலும், 2009ம் ஆண்டுத் தொடக்கத்திலும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள், கொலை பாதக ராஜபக்சே அரசால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில், ஈழத் தமிழர்களைப் பற்றி, ஒரு வார்த்தை சோனியா காந்தி பேசியது உண்டா?.

டெல்லிக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை, போரைத் தீவிரப்படுத்தி புலிகளை முற்றாக அழிப்பேன் என்று கொக்கரித்தபோது, அதைக் கண்டித்து மன்மோகன் அரசு ஒரு வார்த்தை கூறியது உண்டா?.

விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று, திரும்பத் திரும்ப வலியுறுத்திய போதும், இந்திய அரசு போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்தவில்லை?.

2009 பிப்ரவரி 18ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசினாரே? டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை இயக்குவதே சோனியா காந்தி அம்மையார் என்பது, உலகு அறிந்த உண்மை.

இந்திய அரசின் உதவியால் தான், யுத்தத்தை வெற்றிகரமாக நாங்கள் நடத்த முடிந்தது என்று, சிங்கள அதிபர் ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே? இந்தியா செய்த ராணுவ உதவியால்தான், புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்று, இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தார்களே?.

இலங்கையில் தமிழ் இனப் படுகொலை சிங்கள அரசால் நடத்தப்பட்டதற்கு, முழுக்க முழுக்க உதவியது, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இதற்கு முழுக்க முழுக்க சோனியாதான் காரணம் ஆவார்.

பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம், தமிழர் பகுதிகளுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படவில்லை. வெளிநாட்டுச் செய்தியாளர்கள், இன்று வரை அனுமதிக்கப்படவில்லை. தமிழர் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் திட்டமிட்டு வேகமாக நடக்கிறது.

ஆனால், தமிழர்களை முட்டாள்களாக்க்கி விடலாம் என்று கருதிக்கொண்டு, மறுகுடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக, சோனியா காந்தி கருணாநிதிக்கு, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கடிதம் எழுதி இருக்கிறார்.

உணவும் இன்றி, மருந்தும் இன்றி, சிங்கள விமானக் குண்டுவீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பலியான போது வாய்மூடிக் கிடந்த சோனியா காந்திக்கு, இப்போதுதான் ஈழத் தமிழர்களைப் பற்றி ஞாபகம் வந்தது போலும்.

மத்திய அரசுக்கும், அதற்குத் தலைமை ஏற்கும் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தத் துரோகத்துக்கு உடந்தையாக இருந்த முதல்வர் கருணாநிதிக்கும், வரலாற்றில் என்றுமே மன்னிப்பு கிடையாது என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X