For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவின் 'வரலாற்று தியாகம்'!: கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து!!

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 65வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

சோனியா அவர்களுக்கு, எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது சீரிய தலைமையிலும், மேற்பார்வையிலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நல்லாட்சி வழங்கி வருகிறது. மக்களின் பிரச்சனைகளை தீர்த்துள்ளதன் மூலம் அவர்கள் அமைதியாகவும் திருப்தியாக வாழவும் உறுதி செய்து இருக்கிறீர்கள்.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள தியாகம் செய்ததன் மூலம் இந்த நாட்டின் தலைவிதிக்கு வழிகாட்டுபவராக உங்களை நிருபித்து காட்டி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் காந்தி-நேரு குடும்பத்தின் மீது பாசமும் மற்றும் மரியாதையும் நிரம்ப வைத்துள்ளனர்.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதன் மூலம் உங்கள் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் அனைவரும் அன்பும் ஆதரவும் வைத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், என் சார்பிலும் நீங்கள் நீண்ட நாள் மகிழ்ச்சியுடனும் மனதிருப்தியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மனிதநேயம் வளர்ப்போம்:

நாளை உலக மனித உரிமை தினத்தையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் நாள், உலக மனித உரிமை நாள் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதநேய உணர்வோடு, 1973ம் ஆண்டிலேயே, மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்திய இந்த அரசு, தமிழகத்தில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக் கூடாது எனும் எண்ணத்துடன் 1997ல் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது.

சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக சாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலைவாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவோர்,

மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து, அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக இந்த மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதி மன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலை நாட்டுவதற்காக, அது தொடங்கப்பட்ட 1997ம் ஆண்டு முதல் இதுவரை வரப்பெற்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொண்டு, 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் திருப்பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறது.

மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டிருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 2008ல் 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, அவர்கள் உயர வழிவகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது இந்த அரசு.

இத்தகைய சூழ்நிலையில், மனிதஉரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடை பெறாமல் முற்றிலும் தடுக்கப்பட்டாக வேண்டும் எனும் உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்;" மண்ணில் மனிதம் காப்போம்-மனிதநேயம் வளர்ப்போம்" என இந்நாளில் உறுதியேற்போமாக என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X