• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் சிந்தையில் என்றும் நிறைந்திருக்கும் கோவையின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகிறேன்-கருணாநிதி

|

Karunanidhi
சென்னை: கோவை சிங்காநல்லூரில் தங்கி வாழ்ந்த அந்தநாள் தொட்டு என் சிந்தையில் என்றும் நிறைந்திருக்கும் இந்தக் கோவை மாநகர வளர்ச்சியில் நான் எப்பொழுதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

கோவை காந்திபுரத்தில் ரூ.148 கோடியில் புதிய மேம்பாலம், கோவை சிறை வளாகத்தில் ரூ.20 கோடியில் செம்மொழி பூங்கா, ரூ.50 கோடியில் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம், ரூ.28 கோடியில் ஆவின் நிறுவன மேம்பாட்டு திட்டம், ரூ.66 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கட்டிடம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரூ.185 கோடியில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகள், ரூ.25 கோடியில் மத்திய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கட்டும் திட்டப்பணிகள் உள்பட ரூ.543 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் கோவை மாவட்டத்தில் நடைபெற இருந்தது.

இந்த நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்க இருந்தது.

இதுபோக கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவை நகரின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலையும் முதல்வர் இன்று மாலை தொடங்கி வைப்பதாக இருந்தது.

இந்த நிலையில் முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது கோவை பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இவற்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. பின்னர் அவர் ஆற்றிய உரை:

இன்று கோவையில் நடைபெறவிருந்த விழாவிற்கு நான் வருவதாக இருந்து - திடீரென எனது உடல்நிலை ஒத்து வராத காரணத்தால் வர இயலாமைக்கு வருந்துகிறேன். என்னுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களுக்கு நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பையும் கோருகிறேன்.

543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாநகரத்தில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கிட நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் மற்றும் திறப்பு விழாவில் பங்கு பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவை சிங்காநல்லூரில் தங்கி வாழ்ந்த அந்தநாள் தொட்டு என் சிந்தையில் என்றும் நிறைந்திருக்கும் இந்தக் கோவை மாநகர வளர்ச்சியில் நான் எப்பொழுதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன் என்பதை எல்லோரும் நன்கு அறிவீர்கள்.

கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் கடந்த காலங்களில் - வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவைக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணித் திட்டம், கோவையில் மூன்றடுக்கு மேம்பாலம், கோவை கிராஸ்கட் சாலையில் மேம்பாலம், கோவை - சத்தியமங்கலம் காமராச நகர் சாலையில் பாலம், கோவை - சிறுவாணி சாலையில் பாலம், கோவை - திண்டுக்கல் சாலையில் பாலம், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம், ஆத்துப் பாலம் பிரிட்ஜ் மற்றும் கோவை புறவழிச் சாலை, அண்ணா தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம், 29 ஏக்கர் பரப்பில், 250 கோடி ரூபாய்ச் செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, 1469 கோடி ரூபாய்ச் செலவில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், பில்லூர் அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மாநகருக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - உட்பட பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

2010 ஜூன் திங்களில் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களை ஈர்த்து எழுச்சியோடு நடைபெற்று வெற்றி குவித்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை மாநகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அவற்றுடன், மேலும் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட இன்றைய விழாவிலே அடிக்கல் நாட்டப்படுகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் நான் உரையாற்றியபோது வெளியிடப்பட்ட அறிவிப்புகளிலே ஒன்று தான் காந்திபுரம் மேம்பாலம்; கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும் அருகருகே அமைந்துள்ளதால், கோவை மாநகரிலேயே போக்குவரத்து நெரிசல் மிக மிகுதியான பகுதியாக அமைந்து காந்திபுரத்தில் நஞ்சப்பா சாலையில் தொடங்கி, கிராஸ் கட் சாலை சந்திப்பு, நூறடிச் சாலைச் சந்திப்பு ஆகியவற்றைக் கடந்து, சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லக் கூடிய வகையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேலான நீளம் கொண்ட, 148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேம்பாலம்.

செம்மொழி மாநாட்டு அறிவிப்புகளில் மற்றொன்று - கோவை மாநகரில் பழைய சிறைச்சாலை அமைந்துள்ள 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்கா. கோவையில் தற்போதுள்ள சிறைச்சாலையை வேறு இடத்தில் மாற்றுவதற்காக, கோவைக்கு அருகில் வெள்ளலூர் என்னுமிடத்தில், கோவை மாநகராட்சி 75 ஏக்கர் நிலத்தை வழங்கிட முன்வந்துள்ளது.

அந்த இடத்திற்குத் தற்போதைய சிறைச்சாலையை மாற்றிய பிறகு 165 ஏக்கர் நிலம் முழுவதும் சர்வதேசத் தரத்திலே செம்மொழிப் பூங்கா அமைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக அங்கு தற்போது கட்டடங்கள் இல்லாத 45 ஏக்கர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்கா.

பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் எடுத்துச் செல்லக்கூடிய 50 ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்ட காண்டூர்க் கால்வாய் பழுதடைந்து, முழு கொள்ளளவு நீரையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதால், அக்கால்வாயைச் சீரமைத்திட வேண்டுமென நீண்டகாலமாகக் கோரி வரும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 185 கோடி ரூபாய்ச் செலவில் காண்டூர்க் கால்வாய்ச் சீரமைப்புத் திட்டம்.

கோவை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி இம்மருத்துவக் கல்லூரிக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தபடி, ஏற்கனவே 1000 படுக்கைகள் கொண்ட கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் 1000 படுக்கைகள் இடம்பெறும்வகையிலும், 250 மருத்துவ மாணவ மாணவியர் தங்கும் விடுதி வசதியுடனும் கட்டப்படவுள்ள கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடங்கள்.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் 181 பொறியியல் கல்லூரிகளை இணைப்புக் கல்லூரிகளாகக் கொண்டுள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு கோவை மாவட்டம் சோமையம்பாளையத்தில் 131 ஏக்கர் நிலத்தில் 44 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஏறத்தாழ 67 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படவுள்ள கட்டடங்கள்;

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே உள்ள ஆவின் நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் லாபம் ஈட்டும் சிறந்த நிறுவனமாக விளங்கும் கோவை ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் திறனை நாள்தோறும் இரண்டரை இலட்சம் லிட்டர் என்பதிலிருந்து, 5 லட்சம் லிட்டர் என உயர்த்திடும் நோக்கிலும்; மற்ற பால் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்திடும் நோக்கத்துடனும் ஏறத்தாழ 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை ஆவின் நிறுவனத்தை நவீனமயமாக்கும் திட்டம்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைத் தொழில்களுக்கு உதவும் வகையில் குறுகிய கால ஆடை வடிவமைப்புத் தொழில் சார்ந்த பல்வேறு பயிற்சிகள், பட்டமேற்படிப்பு பட்டயக் கல்வி, ஆயத்த ஆடை மற்றும் ஐவுளித் தொழில் தொடர்பான படிப்புகள் போன்றவற்றை வழங்கிடும் நோக்கத்தில், மத்திய ஜவுளித்துறை மூலம் ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசின் நிதியுதவியோடு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் “தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்" ஆகிய 7 கட்டமைப்புகளுக்கு இன்றைய விழாவிலே அடிக்கல் நாட்டப்படுகிறது.

மேலும், மத்திய ஜவுளித்துறை சார்பில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாநகரத்தில் கட்டப்பட்டுள்ள, சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச ஜவுளித்துறை மேலாண்மைக் கல்வி நிறுவனக் கட்டடமும், கலையரங்கமும் இன்றைய விழாவில் திறந்து வைக்கப்படுகின்றன.

இப்படி, ஏறத்தாழ 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாநகருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அரசு திட்டமிட்டுள்ள புதிய கட்டமைப்புகள் அனைத்தையும், குறித்த நேரத்திற்குள் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதோடு, இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் மற்றவர்களையும் பாராட்டுவதுடன் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்து அமைகிறேன் என்று பேசினார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
CM Karunanidhi indisposed. His planned Coimbatore visit cancelled. He was to launch various govt welfare schemes and to inagurate the Coimbatore"s first ever five star hotel Le Meridien hotel. Now he will inaugurate the schemes and the hotel through video conferencing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more