For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பை பை, 2010!

By Chakra
Google Oneindia Tamil News

Iceland Volcano
கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்திருக்கிறது 2010ம் ஆண்டு. ஜனவரி முதல் டிசம்பர் முடியும் வரை ஒவ்வொரு விநாடியும், ஹாலிவுட் ஆக்ஷன் படத்தை மிஞ்சும் விறுவிறுப்புடன் ஓடி மறைந்திருக்கிறது 2010.

இப்படி ஒரு விறுவிறுப்பான, அதிரடியான, பரபரப்பான ஆண்டை இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு 2010ம் ஆண்டு ஏகப்பட்ட நிகழ்வுகளுடன் நம்மை விட்டு பிரிகிறது.

போர் முடிந்து ஒரு ஆண்டு ஓடியும் இன்னும் விடிவு பெறாமல் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தங்களது தாயகத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளியானது இந்த ஆண்டில்தான்.

அசாஞ்சே என்ற ஒரு தனி மனிதர், உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, ஆட்டம் காண வைத்ததும் இந்த ஆண்டுதான்.

பூகம்பங்கள், புயல்கள் என இயற்கை தனது பேரழிவை இந்த ஆண்டு நிறையவே ஏற்படுத்தி விட்டுப் போயுள்ளது.

இப்படி பல்வேறு வகைகளிலும் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டுப் பிரியும் 2010ல் நடந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பு...

ஜனவரி

1 - வட மேற்கு பாகிஸ்தானின் லக்கி மார்வாத்தில் நடந்த வாலிபால் போட்டியின்போது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதியால் 95 பேர் கொல்லப்பட்டனர். 20 வீடுகள் சிதறின, 100 பேர் காயமடைந்தனர்.

- ஸ்வீடனிடமிருந்து ஸ்பெயின் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டது.

- நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரத்தை வெளியிட்ட டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் குர்ட் வெஸ்டர்கார்ட்டைக் கொல்ல நடந்த சதியை போலீஸார் முறியடித்தனர். சோமாலியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2 - 19 வயதேயான நார்வே நாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் முதலிடத்தைப் பிடித்த முதல் வீரர் இவர்தான்.

- டக்ளஸ் மாசன் என்பவர் 1912ம் ஆண்டு ஓட்டி வந்த ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட விமானத்தின் சிதறல் பாகங்கள் அன்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டன. இதுதான் அன்டார்டிகாவுக்கு பயணித்த முதல் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

3 - மனித உரிமை மீறல் வழக்கில், முன்னாள் அதிபர் அல்பர்டோ பிஜிமோரிக்கு விதிக்கப்பட்ட 25 வருட சிறைத் தண்டனையை பெரு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

- இங்கிலாந்து விமான நிலையங்களில் முழு உடலையும் பரிசோதனை செய்யும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என பிரதமர் கார்டன் பிரவுன் அறிவித்தார்.

4 - சூரினாமின் முதல் அதிபரும், உலகின் மிகவும் வயதான முன்னாள் அதிபர் என்ற பெயரைப் பெற்றவருமாஐன ஜோஹன் பெர்ரியர் தனது 99வது வயதில் நெதர்லாந்தில் மரணமடைந்தார்.

- உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற துபாயின் பர்ஜ் கலிபா பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது.

- தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா 5வது கல்யாணம் செய்து கொண்டார்.

- சர்வதேச நீதிமன்றத்தில் குரோஷியா மீது இனப்படுகொலை வழக்கை தொடர்ந்தது செர்பியா.

5 - சாலமன் தீவுகளை இரண்டு பெரும் நிலநடுக்கங்களும், தொடர்ந்து சுனாமியும் தாக்கின. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழந்தனர்.

- ஈரானுக்கு எதிராக சதி செய்வதாக கூறி 60 சர்வதேச அமைப்புகள், மீடியா நிறுவனங்களுடன் ஈரானியர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என்று ஈரான் அரசு தடை விதித்தது.

6 - தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.

- உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடு என்ற பெயரைப் பெற்றது சீனா. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ஜெர்மனி, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

- இலங்கையில் அவசரகால அமலில் உள்ள அவசரகால சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், எமர்ஜென்சியை நீட்டித்து இலங்கை நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

7 - இலங்கை படையினர் தமிழர்களை கொடூரமாக கொன்ற வீடியோக் காட்சிகள் உண்மையானவையே என்று ஐநா நிபுணர் பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்தார்.

8 - ஆட்டோமொபைல் சந்தையில் உலகின் நம்பர் ஒன் நாடு என்ற பெயரை சீனா பெற்றது.

- மலேசியாவில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல சர்ச்சுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

9 - மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டதாக கூறி 700 விடுதலைப் புலி போராளிகளை இலங்கை அரசு விடுவித்தது.

- மெல்போர்ன் நகரில் இந்தியர் ஒருவர் தீவைத்து எரிக்கப்பட்டார்.

- டோகோ கால்பந்து அணியினர் வந்த பேருந்து கொலை வெறித்தாக்குதலுக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆப்பிரிக்க கோப்பை கால்பந்துப் போட்டியிலிருந்து விலகுவதாக டோகோ அறிவித்தது.

- புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

10 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகனின் தந்தை வேலுப்பிள்ளையின் உடல் தகனம் இன்று வல்வெட்டித் துறையில் நடந்தது.

12 - ஹெய்தி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 லட்சம் பேர் பலியானார்கள். தீவே நாசமாகிப் போனது.

15 - உலகின் மிக நீளமான சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது.

25 - எத்தியோப்பிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. 90 பேர் பலியானார்கள். ஒரே ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

26 - இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்சேகா தோல்வியைத் தழுவினார்.மறுபடியும் ராஜபக்சே வென்றார்.

30 - வயகாராவை விட பன்றிக் கறி சிறந்தது என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிச்னர்.

31 - நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஹிரென் மோகினி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

- தமிழ் ஈழ தனியரசு அமைய வேண்டும் என்று கோரி இங்கிலாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 99.33 சதவீதம் தமிழர்கள் வாக்களித்தனர்.

பிப்ரவரி

1 - லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடந்த கிராமி விருது நிகழ்ச்சியில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள் கிடைத்தன.

4 - லைபீரியா நாட்டுக்குச் சென்றிருந்த மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி அங்கு ஏற்பட்ட கார் விபத்தில் காயமடைந்தார்.

8 - பல பெண்களுடன் காதல் வைத்து பெரும் சிக்கலில் மாட்டிய உலகின் முதல்நிலை கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இணைந்தார். .

- அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ராஜபக்சேவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தவரான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ராஜபக்சே அரசை புரட்சி நடத்திக் கவிழ்க்க சதி செய்ததாகவும், ராஜபக்சே மற்றும் குடும்பத்தினரைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

9 - இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் விட்டார் ராஜபக்சே. நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

13 - மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோரை தியாகிகளாக அறிவித்து நியூசிலாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கெளரப்படுத்தப்பட்டனர்.

28 - சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு 1000 பேர் பலியானார்கள்.

மார்ச்

6 - தென் கொரியாவில், ஒரு தம்பதியினர், இணையதளத்தில் கார்ட்டூன் குழந்தையை வளர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பிசியாக இருந்ததால், அவர்கள் பெற்றெடுத்த கைக்குழந்தை சாப்பாடு இல்லாமல் தவித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 - நைஜீரியாவில் ஜாஸ் என்ற இடத்தில் நடந்த மோதலில் 500 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

11 - உலகின் பெரும் பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் முதலிடத்தைப் பிடித்தார். பில் கேட்ஸ் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

16 - உகாண்டாவில் உள்ள கசுபி டோம்ப், பெரும் தீவிபத்தி்ல் தீக்கிரையானது. இந்த நாட்டில் இருந்த ஒரே உலக பாரம்பரியச் சின்னம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

18 - அமெரிக்காவில் ஜாகிங் போய்க் கொண்டிருந்த ராபர்ட் ஜான்ஸ் என்பவர் மீது சிறிய ரக விமானம் தவறுதலாக இறங்கியதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். ஐபாட் கேட்டபடி அவர் ஜாகிங் போய்க் கொண்டிருந்ததால், நிலை தடுமாறு விழுந்த விமானத்தை அவரால் கவனிக்க முடியவில்லை.

27 - சக மாணவர் விட்ட குறட்டை சத்தத்தால் கோபமடைந்த சீன பல்கலைக்கழக மாணவர் கியோ லிவி, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

ஏப்ரல்

7 - கிர்கிஸ்தானில் ஏற்பட்ட பெரும் கலவரத்தைத் தொடர்ந்து அதிபர் பாகியேவ் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

8 - பொன்சேகா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைப் பிடரியைப் பிடித்து ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்றனர்.

9 - இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சே கூட்டணி வென்றது. பொன்சேகாவும் எம்.பியானார்.

10- போலந்து அதிபர் லெ கசின்ஸ்கியும், அவரது மனைவி உள்பட 97 பேர் ரஷ்யா அருகே நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

13 - சீனாவின் வட மேற்குப் பகுதியான குயிங்காயில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 2000 பேர் பலியானார்கள்.

14 - ஐஸ்லாந்தில் மிகப் பெரிய எரிமலை வெடித்துக் கிளம்பியதால் ஏற்பட்ட பெரும் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளியை மறைத்ததால் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஐரோப்பிய விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

27 -கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவால் ஐரோப்பிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.

மே

3 - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர்க் காலத்தில் கட்டுரைகள் எழுதியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட, சன்டே டைம்ஸ் பத்திரிகையி்ன் சிறப்புச் செய்தியாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்குவதாக ராஜபக்சே அறிவித்தார்.

5 - நாடாளுமன்றக் கூட்டத்தில் தன்னைப் பங்கேற்க அனுமதிக்காததைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் சரத் பொன்சேகா.

7 - இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வென்று முன்னிலை பெற்றது. ஆனால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

10 - வெளிநாட்டு அதிபர் ஒருவர் பிரான்ஸ் வந்திருந்தபோது தானும், அதிபர் சர்கோஸியும் செக்ஸில் ஈடுபட்டிருந்ததாக அவரது மனைவி கர்லா ப்ரூனி கூறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

12 - லிபியாவில் விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகியதில் 112 பேர் கொல்லப்பட்டனர்.

- இங்கிலாந்து புதிய பிரதமராக டேவிட் கேமரூன் பதவியேற்றார். இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சிப் பதவிக்கு வந்தது.

19 - பாங்காக்கில் நடந்த மிகப் பெரிய மோதலில் ராணுவத்தினர் தாக்கி 91 பேர் கொல்லப்பட்டனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

28 - பாகிஸ்தானின் லாகூரில் 2 மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

31 - காஸா பகுதிக்கு வந்த நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தி இரக்கமற்ற தாக்குதலில் கப்பலில் இருந்த 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன்

9 - கிர்கிஸ்தானில் கிர்கிஸ் இனத்தவருக்கும், உஸ்பெக் இனத்தவர்களுக்கும் இடையே மீண்டும் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.

11 - தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் தொடங்கின.

24 - ஆ ஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமரான ஜூலியன் கில்லார்ட் பதவியேற்றார்.

28 - கனடாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.


ஜூலை

1 - ஸ்பெயினிடமிருந்து பெல்ஜியம் நாடு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றது.

3 - காங்கோவில் எண்ணெய் லாரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அந்த எண்ணையைப் பிடிக்க மக்கள் முயன்றபோது தீவிபத்து ஏற்பட்டு 220 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

8 - சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமானம் 24 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது.

11 - தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

25 - ஆப்கானிஸ்தான் போர் குறித்த அமெரிக்க தூதரக தகவல்கள் அடங்கிய 90,000 ஆவணங்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் உலகையே நடுங்க வைத்தது.

28 - இஸ்லாமாபாத் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி 155 பேர் இறந்தனர்.

ஆகஸ்ட்

1 - பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1500 பேர் பலியானார்கள். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

10 - பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

23 - பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்தை ஒருவர் கடத்தினார். பின்னர் அதிரடிப்படையினர் அதிரடியாக செயல்பட்டு அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.இந்த மோதலின்போது சில பயணிகளும் உயிரிழந்தனர்.

24 - அமெரிக்காவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மெக்சிகோவின் நவரத்தே வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார்.

29 - மஜீத் என்ற புரோக்கர் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து முகம்மது ஆமிர், முகம்மது ஆசிப், கம்ரன் அக்மால், சல்மான் பட் உள்ளிட்ட 7 வீரர்கள் சிக்கினர். இங்கிலாந்து வந்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். பட், ஆசிப், ஆமிர் ஆகியோர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

செப்டம்பர்

9- இந்திய பிபிஓ நிறுவனங்களிடம் பணிகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

17 - மட்டக்களப்பில் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்டிருந்த லாரி வெடித்துச் சிதறியதில் 2 சீனர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.

30 - பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட 30 மாதச் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தி ஒப்புதல் அளித்தார் ராஜபக்சே.

அக்டோபர்

8 - சீன ஜனநாயகத் தலைவர் லியூ ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்தது.

9 - ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

13 - சில நாட்டில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 33 தொழிலாளர்கள் 68 நாள் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினர்.

22 - விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் 3641 நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது. 2000மாவது ஆண்டு இது அமைக்கப்பட்டது.

26 - முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொன்றது பாகிஸ்தான் தலிபான்கள் என அறிவிக்கப்பட்டது.

நவம்பர்

11 - சியோல் நகரில் ஜி-20 மாநாடு நடந்தது.

13 - மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி விடுதலை செய்யப்பட்டார்.

23 - தென் கொரியத் தீவின் மீது வட கொரியா திடீரென ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் அதிகரித்தது.

- கம்போடியாவில் நடந்த தண்ணீர்த் திருவிழாவின்போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 375 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

27 - சீனாவின் குவாங்ஷு நகரில்நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் இந்தியா 14 தங்கம் உள்பட 64 பதக்கங்களைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்தது.

28 - 2,50,000 அமெரிக்க தூதரக ஆவணங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

29 -மெக்சிகோவின் கான்கன் நகரில் புவிவெப்ப தடுப்பு மாநாடு தொடங்கியது.


டிசம்பர்

2 - இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த பல்வேறு மனித உரி்மை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயாவுமே பொறுப்பு, இருவரும் போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று அமெரிக்கத் தூதர் அனுப்பிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்க மீடியா பிரிவில் பணியாற்றி வந்த இசைப் பிரியா மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 - வியட்நாமில் நடந்த மிஸ் எர்த் போட்டியில் இந்தியாவின் நிக்கோல் பரியா முடி சூட்டப்பட்டார்.

16 - கடும் இழுபறிக்குப் பின்னர் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரது ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் அரசு தொடர்ந்த அப்பீல் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து அவர் விடுதலையானார்.

25 - அமெரிக்காவின் பாசதீனா நகரில் படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது ஜெயச்சந்திரா என்ற மாணவர் கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார்.

- பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர்

27 - சுவிட்சர்லாந்து, சிலி தூதரகங்களைத் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள கிரேக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு பார்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

- பாகிஸ்தானின் பலுசிஸ்தானைச் சேர்ந்த 27 இந்துக் குடும்பத்தினர் அரசியல் புகலிடம்கோரி இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

- ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த பெரும் தீவிபத்தில் சிக்கி 50 சர்க்கஸ் விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.

28 - அமெரிக்காவின் வட கிழக்கில் கடும் பனிப் புயல் வீசியது. 2 அடி அளவுக்கு அடர்த்தியாக கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X