For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் சமுதாய முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுகிறது திமுக-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தியும், பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தியும் பெண்கள் சமுதாயம் முன்னேற தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா 8-3-2011 அன்று (இன்று) மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில் நிiயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857-ம் ஆண்டு மார்ச் திங்கள் 8-ம் நாள். பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவுறுத்திய சமத்துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலைவாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காகத் தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டிடும் வகையில் பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

1973-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்யப்பட்டு; மகளிர் பலர் இன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளாக விளங்குகின்றனர்.

1989-ல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழிவகுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் 10-ம் வகுப்புவரையேனும் படிக்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989-ல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996-ல் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில்; 2001-ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.

ஆனால், ஏழை - எளிய மகளிரின் முன்னேற்றம் கருதி தி.மு.க. அரசு 2006-ல் பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், 2008-ல் 20 ஆயிரம் ரூபாய் எனவும், 2010-ல் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கடந்த ஐந்தாண்டுகளில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 832 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது.

ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989-ல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007-ல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடைகின்றனர்.

இவைமட்டுமல்லாமல், 1990-ல் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குத் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்;

2006-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்;

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உள்பட பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் முன்னேற தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும் வகையில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அவர்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் எனது உளமார வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
CM Karunanidhi has extended his greetings to the women on International women's day. He also have listed out his govt's various schemes for the welfare of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X