For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ சட்டசபைக்குள் வருவதை ஜெ விரும்பவில்லை?!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: "மதிமுகவுக்கு இது சோதனை காலம். ஆனாலும் அவமானங்களைத் தாங்கிப் பொறுத்திருப்போம், அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவோம். நாம் யார் என்பதைக் காட்டுவோம்," என்று தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதிமுக அணியை விட்டு ஒதுங்காமல் கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறது மதிமுக. ஆனாலும், புதிதாக வந்த தேமுதிகவுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, ஆரம்பத் தோழரான வைகோவை கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.

கடந்த தேர்தலில் திமுக 27 தொகுதிகள் கொடுத்த நிலையில், திடீரென அதிமுக 8 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 35 தொகுதிகள் தந்ததால் அந்தக் கூட்டணிக்குத் தாவினார் வைகோ.

ஆனால், இந்த முறை மொத்தமே 8 தொகுதிகள் தான் தரப்படும் என்று அதிமுக கூறிவிட்டது.

அதுமட்டுமல்ல, இந்த 8 தொகுதிகள் என்ற விவரத்தையே பத்திரிகைகளுக்கு கசியவிட்டு வைகோவை மிகப்பெரிய சங்கடத்துக்கும், மதிமுகவினரை சோர்வுக்கும் உள்ளாக்கியதும் அதிமுக நிர்வாகிகளும், அவர்களது முக்கிய ஆலோசகர் ஒருவரும்தான் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது.

இந் நிலையில், தொண்டர்களும் நிர்வாகிகளும் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கட்சிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நாம் யார் என்பதை நிரூபிப்போம். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வரும் 19ல் கூட்டியுள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம். அதன்பின், அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் வராத சூழ்நிலையில் கட்சியினர் மார்ச் 19ம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.

மதிமுகவை ஒதுக்குவோர் ஓரங்கட்டப்படுவார்கள்-நாஞ்சில் சம்பத்:

இந்த நிலையில், மதிமுகவை ஒதுக்குவோர் ஓரங்கட்டப்படுவர் என்று பேசியுள்ளார் மதிமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்.

கரூர் மாவட்ட மதிமுக சார்பில், கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ. 41 லட்சத்து 55 ஆயிரத்து 500 வழங்கும் நிகழ்ச்சி கரூரிலுள்ள கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கட்சியின் மாவட்டச் செயலர் பரணிமணி கட்சி வளர்ச்சி நிதியை நாஞ்சில் சம்பத்திடம் வழங்கினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியது:

இப்போதைய அரசியல் சூழ்நிலை மதிமுகவிற்குச் சாதகமாக உள்ளது. மதிமுகவை யார் ஒதுக்க நினைக்கிறார்களோ அவர்கள் ஒதுக்கப்படுவர், நிராகரிக்க நினைப்போரை மக்கள் நிராகரிப்பர்.

அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறும் எண்ணம் இல்லை. அதேபோல, 3வது அணி அமைக்கும் எண்ணமும் இல்லை. அதிமுக கூட்டணியிலேயே நீடித்து வருகிறோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. திமுகவினர் இதுவரையில் 3 கட்டங்களாகப் பணம் வழங்கிவிட்டனர். இதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

காட்டுமன்னார்கோவிலிலிருந்து கரூர் வரும் வழியில் 5 முறை வாகனத் தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டேன். இந்த நிலை ஆளும் கட்சியினருக்கு ஏற்படுமா?

அதிமுக கூட்டணியில் 40 இடங்களைக் கேட்டுள்ளோம். இவற்றில் குறைந்தபட்சம் 23 தொகுதிகளைத் தர வேண்டும். அவ்வாறு கிடைக்காதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம்", என்றார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வைகோ தாவ முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 8 இடங்கள் தருவதாகக் கூறிய அதிமுக பின்னர் 7 இடங்கள் தான் தர முடியும் என்றும் வைகோவுக்கு செய்தி அனுப்பி அவரை மேலும் நோகடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் வைகோவை அவரது வீட்டில் சந்தித்து, முதலில் 8 தொகுதிகள் தருவதாக அம்மா சொன்னார்கள். ஆனால் அதில் ஒரு சீட்டை குறைத்து 7 தான் தர முடியும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார்கள் என்று கூறிவி்ட்டு அதே வேகத்தில் திரும்பிச் சென்றுள்ளனர்.

தீவிர எல்டிடிஈ ஆதரவாளரான வைகோ போன்ற ஒரு தலைவர் சட்டசபைக்குள் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுவதாகத் தெரிகிறது. இதனால் தான் அவரையும் கட்சியையும் ஒழித்துக் கட்ட 'அந்த ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிக்கையாளரின்' யோசனைப்படி ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிகிறது.

இந்த முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வைகோ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நான் போட்டியிட மாட்டேன் என்று உறுதிமொழி தந்தால் அவரது கட்சிக்கான இடங்களை ஜெயலலிதா அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

English summary
Vaiko, gen secretary of MDMK, wrote a letter to his partymen and functionaries to wait patiently for the next move of the party. Vaiko, the long time partner of Jayalalitha's AIADMK is now almost forced to quit the ally due to negligence of her. Meanwhile, MDMK propoganda secretary Nanjil Sambath urged the AIADMK to allot at least 23 seats in coming elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X