For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பா அரசைக் கலைக்க கவர்னர் சிபாரிசு: மத்திய அரசு ஏற்காது?

By Chakra
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கக் கோரி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள், டெல்லியில் அத்வானியின் இல்லத்தில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் எதியூரப்பா அரசுக்கு எதிராக 11 பாஜக எம்எல்ஏக்களும், அரசை ஆதரித்து வந்த 5 சுயேச்சைகளும் போர்க்கொடி தூக்கினர். தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் தந்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எதியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் போர்க்கொடி உயர்த்திய 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் போப்பையா உத்தரவிட்டார். இதையடுத்து எதியூரப்பா அரசு மெஜாரிட்டியை நிரூபித்து தப்பித்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் எதியூரப்பா மீண்டும் தப்பினார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 16 எம்எல்ஏக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 13ம் தேதி பரபரப்பான தீர்ப்பளித்தது.

சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், ஜனநாயகத்தை அவர் கேலிக்கூத்தாக்கிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தகுதியிழந்த 16 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பதவி பெற்றனர்.

இதனால் எதியூரப்பா அரசு மெஜாரிட்டி இழந்தது. இந் நிலையில் இந்த 16 பேரில் 11 பாஜக எம்எல்ஏக்களுடன் எதியூரப்பா, அருண் ஜேட்லி ஆகிய தலைவர்கள் பேச்சு நடத்தினர். அவர்களிடம் என்ன பேரம் பேசப்பட்டது என்று தெரியவில்லை. இந் நிலையில் இந்த 11 பேரில் 10 பேர் மீண்டும் திடீரென அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக எதியூரப்பா அறிவித்தார். ஆனால், கடந்தமுறை சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தபோது நடந்த கேலிக் கூத்துகளை சுட்டிக் காட்டிய கவர்னர் பரத்வாஜ், மீண்டும் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கோர மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இதனால் அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் அரசைக் காப்பாற்றிக் கொள்ள இந்த 10 பாஜக எம்எல்ஏக்களையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பினார் எதியூரப்பா.

அவர்களும் எதியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதத்துடன் பரத்வாஜை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றனர். ஆனால் அவர்களை கவர்னர் மாளிகைக்குள் நுழைய விட பரத்வாஜ் மறுத்துவிட்டார். இதனால் பல மணி காத்திருந்த அவர்களை நீண்ட நேரத்துக்குப் பின் சந்தித்தார் பரத்வாஜ். இதையடுத்து எதியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து 10 எம்.எல்.ஏக்களும் அவரிடம் கடிதம் தந்தனர்.

இதனால் அரசுக்கு ஆபத்து நீங்கி விட்டதாக எதியூரப்பாவும் பாஜக தலைவர்களும் பெருமூச்சு விட்ட நிலையில், திடீர் திருப்பமாக கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் சிபாரிசு செய்து நேற்றிரவு கடிதம் அனுப்பினார்.
16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், அதன் பின்னணியில் ஆட்சியைக் கலைக்க கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து இரவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்களுடன் எதியூரப்பா ஆலோசனை நடத்தினார். ஆதரவு வாபஸ் பெற்று இப்போது ஆதரவு தரும் 10 எம்எல்ஏக்களும் அவரை சந்தித்தனர்.

இக் கூட்டத்தைத் தொடர்ந்து எதியூரப்பா, ஜனாதிபதி பிரதிபா பட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பினார். அதில், எனது அரசுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பேச்சைக் கேட்டு கவர்னர் பரத்வாஜ் அரசியல் சதி செய்கிறார். கவர்னரின் எந்த ஒரு சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டமும் மாலையில் அமைச்சரவைக் கூட்டமும் நடக்கவுள்ளது. பாஜக எம்.எல்.ஏக்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி முன்பு அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனக்கு 127 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், அவர்களை குடியரசுத் தலைவர் முன் நிறுத்துவேன் என்றும் கூறியுள்ள எதியூரப்பா அவர்களை இன்றிரவு டெல்லி அழைத்துச் செல்கிறார்.

மேலும் அவசர சட்டசபை கூட்டத்தை இன்று முதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கவர்னருக்கு அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், அந்தக் கூட்டத்துக்குக்கும் கவர்னர் அனுமதி தரவில்லை.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர்களும் தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இன்று டெல்லியில் அத்வானியில் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இன்று மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க கவர்னர் செய்துள்ள பரிந்துரையின் மீது முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஆளுநரின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காது?:

இந் நிலையில் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கவர்னரின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காது என்று தெரிகிறது.

இதற்கிடையே ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை பாஜக கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை சந்தித்து கவர்னரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு கோர உள்ளனர்.

English summary
Slamming the Karnataka Governor for recommending dismissal of his government, Chief Minister B.S. Yeddyurappa on Monday said the action amounted to an “affront” to the pride of the people of the State and the mandate given to the Bharatiya Janata Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X