For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தியும், பள்ளிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று மாலை சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்பாட்டம் நடத்துகிறது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நான்கு வகையான பாடத் திட்டங்கள் இருந்தன. தமிழக அரசு அமைத்த முனைவர் ச.முத்துக்குமரன் குழு நீண்ட காலம் ஆய்வு செய்து, பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, ஒரே வகை பாடத்திட்டத்தை பரிந்துரைத்தது.

அதன்படி ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றுக் கொண்டு, மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிக்கவும் பரிந்துரைத்தது இன்னும் பல நல்ல பரிந்துரைகளை அக்குழு வழங்கியது. இதற்கு சமச்சீர்க் கல்வித் திட்டம் என்று பெயரிடப்பட்டது.

கொள்ளை லாபம் தரும் வணிகமாக மெட்ரிகுலேசன் பள்ளிகளை நடத்தி வரும் வலுவான கல்வி முதலாளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதே போல் சமூகத்தில் வர்ண சாதி ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் பிற்போக்காளர்களும் சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர்.

அரசு பள்ளிகளை விட தங்கள் பள்ளிகளில் மிக உயர்ந்த தரத்துடன் பாடத் திட்டம் உள்ளது என்று கூறிக்கொண்டுதான் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் தங்கள் வணிகத்தை நடத்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்ரிக் பள்ளி பாடத்திட்டத்தை விட தரத்தில் கூடுதலாக உள்ள சமச்சீர் பாடத்திட்டம் அனைவருக்கும் பொதுவாக வந்தவுடன் அவர்கள் தரம் பற்றி பேசி, பெற்றோர்களிடம் பீதியை கிளப்புகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் 10.6.2011 அன்று அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வியை செயல்படுத்திக்கொண்டே, தேவைப்படும் தர மேம்பாட்டை செய்து கொள்ளலாம் என்றும், நீக்க வேண்டிய பாடங்கள் இருந்தால் அதை மட்டும் நீக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியது.

இந்த அடிப்படையில் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதற்கு மாறாக அத்திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்சநீதிமன்றம் சென்று அத்திட்டத்தை நீக்கக் கோரியது செல்வி செயலலிதா அரசு.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வி பற்றி அதனிடம் பரிந்துரை பெற்று, அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் படி செயல்படவேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் 15.6.2011 அன்று தீர்ப்பளித்தது.

தமிழக முதல்வர் செயலலிதா அமைத்துள்ள வல்லுநர் குழுவில் சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து எதிர்த்து வரும் சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகி விஜயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதலாளி சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேசாத்ரி பாலபவன் பள்ளிகள் முதலாளி இராஜ லெட்சுமி பார்த்த சாரதி ஆகியோரை சேர்த்துள்ளார். நடுவண் கல்வித்துறை சார்ந்த இருவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் தமிழக அரசின் அதிகாரிகள். தமிழக அரசு நடத்தும் பள்ளிகளிலிருந்து ஒருவரைக் கூட இக்குழுவில் சேர்க்கவில்லை.

10 பேர் கொண்ட இந்தக் குழு எப்படி பரிந்துரை செய்யும் என்பது இப்போதே புரிகிறது. சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை வர வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இந்த குழுவை முதலைமைச்சர் அமைத்துள்ளார்.

சமச்சீர் கல்வி என்பது சமூக நீதியில் ஒரு முக்கிய கூறாகும். அனைவருக்கும் சம வாய்ப்பு தரும் திட்டமாகும். அதே போல் மெட்ரிகுலேசன் முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கும் இது ஒரு வேகத்தடையாகும்.

இப்பொழுது நீதிபதி ரவிராஜா பாண்டியன், நீதிபதி கோவிந்தராசன் குழு வரையறுத்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் நிர்ணயத்துள்ளார். அவர் நிர்ணயத்த தொகையையும் தாண்டி பல பள்ளிகள் கூடுதலாக வசூல் வேட்டை நடத்துகின்றன.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்று சமச்சீர்க் கல்வியை செயல்படுத்த வலியுறுத்தியும், முதலமைச்சர் தலையிட்டு கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருண்பாரதி, தாம்பரம் த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

அனைவருக்கும் சமமான பொதுக்கல்வியை விரும்பும் ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Desa Poduvudamai Party is protesting today in Chennai insisting the TN government to implement common school syllabus and to stop the schools from collecting more fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X