For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை அகதிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்-கருணாநிதி வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் ரூ. 1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும்.

தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.

இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன.

அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன.

எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

திமுகவினர் மீதான நிலப் பறிப்பு வழக்குகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அ.தி.மு.க.வினர் மீது வரும் உண்மையான நிலப் பறிப்பு புகார்கள் கூட காவல் துறையினரால் சமரசம் செய்து தீர்த்து வைக்கப்படுகின்றன.

ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள் என்றார் கருணாநிதி.

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வினைக்கூட இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவரவிருக்கும் நேரத்தில் - அதிலே தெரிவிக்காமல் தமிழக அரசு தனியானதொரு ஆணையின் மூலமாக அறிவித்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு குறித்து கருணாநிதி கூறுகையில்,

ஆகஸ்டு 4-ந் தேதியன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் பேரவையிலே வைக்கப்படும் என்று கவர்னர் அறிவித்திருக்கிறார். 4-ந் தேதி பேரவை கூடும் என்ற அறிவிப்பும் பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இந்த திட்டம் பற்றி அரசின் சார்பில் அறிவிப்பு வந்திருக்கிறது என்றால், கவர்னர் அறிவிப்புக்கும், நிதிநிலை அறிக்கைக்கும் மற்றும் பேரவைக்கும் இந்த அரசு எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

சன் டிவி சக்சேனா மீதான வழக்குகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இதன் மூலம் உண்மையாகிறது என்றார் கருணாநிதி.

திமுக போராட்டம் தொடரும்

முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் எம்.எல்.ஏக்கள் கருணாநிதியைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினர்.

பின்னர் கருணாநிதியைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சட்டசபையில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, சட்டப்பேரவையில் நிலமைக்கு ஏற்ப திமுக நடந்துகொள்ளும். நிதிநிலை அறிக்கையைப் பார்த்த பின்பு தான் எங்களுடைய கருத்தை சொல்லமுடியும் என்றார்.

திமுகவுக்கு சட்டசபையில் ஒரே இடத்தில் இடம் தரப்படவில்லையே என்ற கேள்விக்கு, சட்டப்பேரவையில் எங்களுக்கு இடமே ஒதுக்கீடு செய்யாதபோது, நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.

தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர்ந்தால், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டபோது, திமுக மீது அடக்குமுறை தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றார்.

திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நாங்கள் வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை என்று பதிலளித்தார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has welcomed the monthly pension scheme for the Lankan refugees. He also said that, earlier DMK govts have contributed more towards Lankan refugees than the ADMK govts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X