For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர் மழையைத் தொடர்நது விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி, கோவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஏரிகளும், குளங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் விட்டு விட்டு கன மழையும் பெய்து வருகிறது.

பலத்த மழை பெய்யும்

இதற்கிடையே, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை இருக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி மற்றும் பாம்பனில் தலா 9 செமீ மழை பெய்துள்ளது. அதிராம்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராதாபுரம் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பெய்துள்ளது.

3ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

கன மழை எச்சரிக்கை:

வரும் 48 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிக பலத்த மழை பெய்யக் கூடும். உள்புறத் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

சென்னை நகரைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம்.

நிரம்பித் ததும்புகிறது புழல் ஏரி

இதற்கிடையே, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி நிரம்பி ததும்ப ஆரம்பித்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 330 கோடி கன அடியாகும் அதாவது 21.2 அடியாகும். இதில் தற்போது நீர் மட்டம் 20.7 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதை 500 கன அடியாக விரைவில் அதிகாரிகள் உயர்த்தவுள்ளனர்.

நெற்பயிர்கள் மூழ்கியது

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையால் விவேகனந்தர் பாறைக்கு படகுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகின்றன. நேற்று 18 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணை 19 அடியாகவும், 43 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்மழையைத் தொடர்ந்து அணைத்து அணைகளும் மூடப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கைக் கூண்டு

தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழையினால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அணைகளில் தொடர்நது நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

புதுவையிலும் கன மழை-பள்ளிகளுக்கு விடுமுறை

இதற்கிடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கன மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக புதுவையிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

English summary
Heavy rain continues to slam Coastal Tamil Nadu today as the depression in the Kumari sea has strengthend. Schools have been ordered to shut in Villupuram, Tuticorin and Nellai districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X