For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் பதில் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது! - சீமான்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது, என நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக்கோரி அனுப்பிய மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது நிராகரித்திருப்பதை எதிர்த்து முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகியோர், 20 ஆண்டுக்காலம் தங்களை சிறையில் வைத்திருந்துவிட்டு, இப்போது கருணை மனுவை நிராகரித்து தூக்கிலிடுமாறு உத்தரவிடுவது நீதிக்குப் புறம்பானது என்றும், ஒரே குற்றத்திற்கு இரட்டை தண்டனையா என்றும் கேள்வி எழுப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அவர்களின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு, கொடூரமானதாகவும், மனிதாபிமற்றதாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுதான் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணானதாகும்.

மூன்று பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப் பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் கருணைக்குரியவர்கள், அவர்களின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உண்மையாகவே கருதுமானால், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல், தமிழக அமைச்சரவையைக் கூட்டி, இந்த மூவரின் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி, அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கட்டும். இதற்கான அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 தமிழக அரசுக்கு வழங்குகிறது. இவ்வாறான ஒரு நடைமுறைக்கு முன்னுதாரணமும் உள்ளது. அதைத்தான் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமாய் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar party chief Seeman said that the affidavit filed by Tamil Nadu govt in Madras high court on the appeal of Rajini killers is disappointing and shocking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X