For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு பெருமுயற்சிகள் எடுத்தும் மீனவர்கள் மீது தாக்குதல்- ஜெ. வேதனை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை தொடர்ந்து தாக்கி வரும் பிரச்சினை தொடர்பாக நான் மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தபோதும், மத்திய அரசு ராஜ்ஜிய அளவில் பெருமுயற்சிகள் எடுத்த போதிலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவம் தடுத்து நிறுத்தப்படாதது தமிழக மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக மீனவர்கள் மத்தியில் ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதம்:

பாக் ஜலசந்தியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும் விஷமிகளாலும் தினசரி தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த மே மாதம் முதல் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், கொடுமைப்படுத்தப்படும் நிகழ்வுகளும், பிடித்துச்செல்லப்படும் சம்பவங்களும் அதிகளவில் நடந்துள்ளன. இதுகுறித்து 10.10.2011 அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில் எனது மிகுந்த கவலையை தங்களுக்கு தெரிவித்து இருந்தேன். இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் கடந்த 8.10.2011 அன்று என்னை சந்தித்தபோதும், இதுகுறித்து தனிப்பட்ட முறையிலும் சொல்லி இருந்தேன்.

நீங்கள் 3.11.2011 அன்று எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த நேரத்தில், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து தங்கள் வருத்தத்தை அவரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாக இலங்கை அரசு தரப்பில் சொல்லப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் கூறி இருந்தீர்கள்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக அக்கறை கொண்டு இலங்கை அரசிடம் வலியுறுத்தியதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விஷயத்தில் இலங்கை அரசைப் பொருத்தவரையில் மத்திய அரசும் தமிழக அரசும் வெளிப்படுத்திய அக்கறைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று இருந்து வருகின்றன என்பதை மிகவும் தயக்கத்துடன் தங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

கடந்த மே மாதம் தொடங்கி இதுநாள் வரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கொடுமைப்படுத்தப்படுதல், பிடித்துச்செல்லப்படுதல் தொடர்பாக 22-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு 10.10.2011 அன்று நான் கடிதம் எழுதிய பின்னர்கூட 6 சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. அந்த சம்பவங்களில் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் மிகவும் வெளிப்படையாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 4.11.2011 அன்று நடந்த ஒரு சம்பவத்தில், இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் கோடியக்கரை கடல் பகுதியில் எந்திர படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அருகே வந்து படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் அறுந்து எறிந்துவிட்டு, படகுகளை நோக்கி கற்களை எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஒரு மீனவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதேபோல், மறுநாள் அதாவது 5.11.2011 அன்று கச்சத்தீவு அருகே ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் எந்திர படகுகளை அடித்து நொறுக்கிவிட்டு மீனவர்களையும் தாக்கிச்சென்று இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஒரு மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாரம்பரியமாக பாக்ஜல சந்தியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மனதில் இந்த பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்ற ஒரு பீதியை ஏற்படுத்தும் நோக்கில் ஒரே மாதிரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த பிரச்சினை தொடர்பாக நான் மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தபோதும். மத்திய அரசு ராஜ்ஜிய அளவில் பெருமுயற்சிகள் எடுத்த போதிலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவம் தடுத்து நிறுத்தப்படாதது தமிழக மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக மீனவர்கள் மத்தியில் ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் விஷயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் கவலையை கடும் வார்த்தைகளாலும், செயல்பாடுகளாலும் இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10.10.2011 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கனவே நான் வற்புறுத்தியபடி, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சினையை ஏதோ தமிழகத்தின் தனிப்பட்ட ஒரு பிரச்சினையாக கருதாமல், தேசிய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

English summary
CM Jayalalitha has urged the PM Manmohan Singh to talk tough against SL govt in fishermen attack issue. She has urged him in a letter that, SL should be given a strong warning on the fishermen issue. Indian govt should take stern action against the SL Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X