For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், முல்லைவேந்தன் மீது நிலஅபகரிப்பு புகார்

Google Oneindia Tamil News

Veerapandi Arumugam
சேலம்: முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முல்லை வேந்தன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிலமோசடி வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட அதிமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான மணிகண்டன் கூறியதாவது,

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது சேலம் சாப்ட்வியூ டெக்னோ டெவலப்மென்ட் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் சேர்ந்தனர். கடந்த 2008ம் ஆண்டு ஐ.டி. பார்க் அமைப்பதற்காக உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கேட்டனர். அந்த இடத்தில் அமைக்கப்பட உள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தருவதாகவும் கூறினர். இதற்காக 3 விவசாயிகளிடம் இருந்து 10 ஏக்கர் விளை நிலத்தை வாங்கினர்.

இடத்தை வாங்கிய போது அதன் சந்தை மதிப்பு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் என்றிருந்தது. ஆனால் அவர்கள் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கினர். குறைந்த விலைக்குக் கொடுத்தாலும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நிலத்தை விற்றனர்.

சேலம் சாப்ட்வியூ டெக்னோ டெவலப்மென்ட் டிரஸ்ட் தலைவராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டு நிலத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் இது குறித்து அரசுக்கு முறையாக அறிவிக்கவில்லை. இதன் மூலம் அமைச்சர்கள் சொத்து வாங்கினால் அரசுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

நிலம் வாங்கிய 2 மாதங்களில் அறக்கட்டளை நிர்வாகம் கூடியது. அந்த கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஐ.டி பார்க் அமைப்பது சிரமம் என்பதால் அந்த திட்டத்தை கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளிடம் வாங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நெருக்கமான பூலவாரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் பெயரில் பவர் எழுதி கொடுத்தனர்.

2 மாதங்களுக்கு பிறகு 10 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க முடியவில்லை என்று கூறிய பெருமாள்,வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தலைவராக உள்ள வி.எஸ்.ஏ. கல்வி அறக்கட்டளைக்கு மாற்றி எழுதினார். இவ்வாறு அந்த 10 ஏக்கர் விவசாய நிலம் பலரது பெயரில் மாற்றப்பட்டு கடைசியில் வீரபாண்டி ஆறுமுகம் அபகரித்துள்ளார்.

கடந்த 2009 டிசம்பர் முதல் 2010 மார்ச் மாதம் வரையிலான 4 மாதங்களில் இதேபோல 40 ஏக்கர் நிலம் மிக குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. இவை வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

முல்லைவேந்தன் மீது நிலஅபகரிப்பு புகார்:

இதற்கிடையே மற்றொரு முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன்மீதும் நில அபகரிப்பு புகார் கிளம்பியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள பாமாண்டப்பட்டியில் 55.32 ஏக்கர் பேரூராட்சி நிலம் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது அந்த நிலத்தில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பழத்தோட்டமாக மாற்ற அப்போதைய அமைச்சர் அன்பழகன் நடவடிக்கைகள் எடுத்தார்.ஆனால் கடந்த 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அந்த நிலத்தை வழங்க போவதாக கூறிய திமுக அமைச்சர் முல்லைவேந்தன், நிலத்தின் சில பகுதிகளை அபகரித்து, தனது சொந்த பழத்தோட்டத்துடன் இணைத்துக் கொண்டார். கடந்த திமுக ஆட்சியில் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த தனசேகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து கடந்த 8ம் தேதி பேரூராட்சிக் கூட்டத்தில் அபகரிப்பில் சிக்கிய பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மற்றும் அபகரிப்பு புகார் மனு அடிப்படையில் நேற்று முன்தினம் வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி நிலத்தை சர்வே செய்தனர். இதில் பேரூராட்சி நிலம் அபகரிப்பில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கம்பைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி கூறியதாவது,

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலம் நேற்றுமுன்தினம் சர்வே செய்யப்பட்டது. இதில் 10 முதல் 13 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்த அறிக்கை கிடைத்த பிறகு கலெக்டர் உத்தரவுப்படி விசாரணைக்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

English summary
Fresh land grabbing complaints have been given against former DMK ministers Veerapandi Arumugam and Mullaivendan. Veerapandi Arumugam who was arrested in some other land grabbing case is now in bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X