For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வாரியத்திற்கு தர மாநில அரசிடம் பணமில்லை-ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha Cabinet Meet
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணமும் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் விவசாயிகளுக்கும், நெசவாளருக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின் ஜெயா டிவியில் உரையாற்றிய அவர் பல்வேறு விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் இன்றியமையா சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டு வந்த அதே சமயத்தில், துறை வாரியான ஆய்வுகளையும் நான் மேற்கொண்டேன்.

இந்த ஆய்வுகளின் போது தமிழக அரசு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சீர் செய்து மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலப் பணிகளையும் முடுக்கிவிட முடிவு செய்து, மின் வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும், அதிக அளவில், கூடுதல் விலை கொடுத்து, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்,

மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும், கடலோரப் பகுதி மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14ம் தேதி டெல்லி சென்று பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவினை அளித்தேன். இது குறித்து நீண்ட நேரம் என்னுடன் உரையாடிய பாரதப் பிரதமர், ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
பின்னர், இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், திட்டக் குழு இது குறித்து உரிய முடிவு எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இதையடுத்து ஜூலை 6ம் தேதி அன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவை நான் சந்தித்த போது, இந்தச் சிறப்பு நிதியுதவி குறித்து அவருக்கு நினைவூட்டினேன்.

ஆனாலும், திட்டக் குழுவிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் ரூ. 21,610 கோடி அளவுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய அரசு எந்த உதவியையும் செய்ய முன் வராத நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமையும் அதலபாதாளத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு தற்போது 'ஆக்சிஜன்' வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும் செயலற்று போய்விடும். அதனால் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, அத்தகைய ஒரு நிலையை தடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை எடுத்துக் கொண்டால், மார்ச் 31 நிலவரப்படி ரூ. 40,659 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், மின் தேவையை சமாளிக்க மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியது தான்.

2010-2011ம் ஆண்டில் மட்டும் ரூ. 19,302 கோடி அளவுக்கு வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கப்பட்டு இருக்கிறது.

எனது முந்தைய 2005-2006ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் ரூ.4,911 கோடி என்று இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நஷ்டத்தை ரூ.40,659 கோடி அளவுக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றிய பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதியையே சாரும்.

இது மட்டுமல்ல. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை ரூ.42,175 கோடி ஆகும். இதே நிலைமை நீடித்தால், இந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் அளவு ரூ.53,000 கோடியை தாண்டிவிடும். மேலும், மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10,000 கோடி ஆகும்.

தமிழக அரசின் மொத்த கடன் அளவான ரூ.1,01,349 349 கோடியுடன், மின்சார வாரியத்தின் கடன் அளவான சுமார் ரூ.53,000 கோடியை ஒப்பிட்டுப் பார்த்தால், மின் வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெளிவாகும்.

கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடன் வாங்கி, பழைய கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தி வருகிறது. 2010-2011ம் ஆண்டில் மட்டும், ரூ. 21,385 கோடி கடன் பெற்று, ரூ.15,000 கோடிக்கு மேல் கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறு கடனில் மூழ்கி திவாலாகும் நிலையை மின்சார வாரியம் எட்டிவிட்டது.

இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், மின்சார வாரியம் மேலும் கடன் பெறவேண்டும். ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச் சந்தையில் இருந்து கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் இந்த ஆண்டு முழுமைக்கும் வழங்கப்பட வேண்டிய மானியத் தொகையான ரூ. 2,016 கோடியை மின்வாரியத்துக்கு முன்னதாகவே அரசு வழங்கியுள்ளது. மேலும், பங்கு மூலதனமாக ரூ. 1,055 கோடியையும், கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக ரூ. 500 கோடியையும் அரசு வழங்கி உள்ளது.

இதற்கு மேலும் மின்சார வாரியத்திற்கு பணம் தர மாநில அரசிடம் பணமில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமையும் எனது தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும்.

அதே சமயத்தில், விவசாயிகள், நெசவாளர்கள், ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் வருபவர்கள், ஆகியோருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வழி வகை செய்யும் வகையில் அதற்கான மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

அதிக அளவு மின்சாரம் உபயோகிப்பவர்களைத் தவிர, மற்ற வீட்டு மின்சார பயனீட்டாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கும். மேலும் மின்சார திருட்டை ஒழிப்பது, மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பது, மின்சார பகிர்மான கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மின் இழப்பை குறைப்பது, நிர்வாக செலவுகளை நெறிமுறைப்படுத்தி கட்டுப்படுத்துவது, செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் விரைவிலேயே மின் கட்டணம் உயரவுள்ளது.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa today announced that the Electricity Regulatory Commission would take a decision on revising power tariff in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X