For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலேகான் குண்டுவெடிப்பு: அப்பாவிகளை சிறையில் அடைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?

Google Oneindia Tamil News

Malegaon Accused
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள 7 பேரின் குடும்பத்தினரும், தங்களது உறவினர்களை தவறாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்க காரணமான காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திற்குத் தொடர்பு உள்ளதாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அறிவித்தனர். மேலும் அந்த அமைப்புடன் தொடர்புடயைவர்களாக கூறி, மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்ட 9 பேருக்கு எதிராகவும் எந்தவிதமான ஆதாரமும் சிக்கவில்லை.

இந்த நிலையில்தான் மாலேகான் சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் துறவி சாத்வி பிரக்யா தேவி என்கிற பிரக்யா தாக்கூர் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதானார்கள். உச்சகட்டமாக இந்த சம்பவத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சாமியார் அசீமானந்தா கைது செய்யப்பட்டார்.

மாலேகான் சம்பவத்தில் இந்து தீவரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை அவர் ஒத்துக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேரும் அப்பாவிகள், புதிதாக கைதானவர்களை தீவிரமாக விசாரிக்கலாம் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏவுக்கு சிபிஐ பரிந்துரைத்தது.

இதையடுத்தே ஏற்கனவே கைதான 9 பேரும் ஜாமீன் கோரி மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட் அவர்களில் 7 பேரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி 7 பேரும் நேற்று விடுதலையானார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேரும் விடுதலையாகியிருப்பது அவர்களது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் நிம்மதிப் பெருமூச்சையும் விட வைத்துள்ளது.

இதுகுறித்து கைதாகி விடுதலையாகியுள்ள டாக்டர் சல்மான் பார்சியின் சகோதரர் மசூத் அகமது அப்துல் அகமது கூறுகையில், கடந்து ஐந்து ஆண்டுகளாக நாங்கள் போராடி வந்தோம். தற்போது இவர்கள் வெளியே வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. மற்றவர்களும் இதேபோல வெளியே வருவார்கள் என நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே, தங்களது உறவினர்களை தவறான குற்றச்சாட்டின் கீழ் 5 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வாட விட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாலேகான் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளன.

தவறு செய்த போலீஸ் அதிகாரிகள், தவறான விசாரணை நடத்தியவர்கள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதேபோல தவறான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் மத்திய அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பி.ராமன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது பிளாக்கில் ராமன் எழுதியுள்ளதாவது:

2006ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் மதவாதமும், அரசியலும் புகுந்து விசாரணையை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. தவறான குற்றச்சாட்டின் பேரில்தான் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி முறையான உருப்படியான ஆதாரம் எதையும் விசாரணை அமைப்புகள் வைத்திருக்கவில்லை. மாறாக இந்த கைதுகளை அரசியல்மயமாக்கி அதன் மூலம் லாபம் அடையும் முயற்சிகள்தான் நடந்து வருகின்றன.

மும்பை சம்பவத்திற்குப் பின்னர் புனே, டெல்லி, வாரணாசியில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. இதனால் உண்மையான குற்றவாளிகள் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். தவறானவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

English summary
Five years after they were accused in the 2006 Malegaon blasts case, seven of the nine accused finally got bail and walked out of jail in Mumbai. This came after the ATS, the CBI and the NIA failed to come up with enough evidence to the nail them. Families of the seven accused in the 2006 Malegaon blasts case were relieved to see their loved ones walking out of prison after five long
 years on Wednesday. And now these families want action against the errant police officers. Forme chief of RAW, B.Raman want the Indian govt to apoligize to these Muslims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X