For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றம் கூடியது- உ.பி. விவகாரத்தை எழுப்பி அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

parliament
டெல்லி: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் புறக்கணிப்பது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்திருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இருப்பினும் உ.பி. விவகாரத்தை எழுப்பி அமளியில் எதிர்க்கட்சியினர் இறங்கியதால், இரு அவைகளும் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். அப்போது உ.பி.யை நான்காக பிரிக்கும் விவகாரம் அவையில் எழுப்பப்பட்டது. அதை அனுமதிக்க மீரா குமார் மறுத்தார். இதனால் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்தது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்சினையை வலியுறுத்தி விவாதம் கோரியது. இதையடுதது இன்று முழுவதும் சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயக்ர அறிவித்தார்.

இதே விவகாரம் காரணமாக ராஜ்யசபாவும் அமளியை சந்தித்தது. பின்னர் கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது

ப.சிதம்பரத்தை பேச விடமாட்டோம்-பாஜக

முன்னதாக 2ஜி விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தை முற்றிலும் புறக்கணிப்பது என்ற முடிவை நேற்று அத்வானி வீட்டில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எடுத்தனர்.

மேலும் லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் ப.சிதம்பரத்தை பேச விடுவதில்லை என்றும், 2ஜி விவகாரத்திற்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்யும் வரையிலும் இந்த புறக்கணிப்பைத் தொடர்வது என்றும் அவை தீர்மானித்துள்ளன.

மேலும், 2ஜி விவகாரம் தொடர்பான சதித் திட்டத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளதால் அவரை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துவது என்றும் பாஜக தலைமையிலான கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின் மூலம் இன்று தொடங்கிய ஒரு மாத கால குளிர்காலக் கூட்டத் தொடர் படு அமளிதுமளி நிறைந்ததாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வர இடது சாரிகள் முடிவு செய்துள்ளனர். அதை ஆதரிப்பது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளது. சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா இன்று அந்த தீர்மானத்தை லோக்சபாவில் தாக்கல் செய்யவுள்ளார்.

அதேபோல பாஜக தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.

காத்திருக்கும் கத்திகள்

இவை தவிர மேலும் பல பிரச்சினைகளை எழுப்பி அரசை நிலைகுலைய வைக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு காத்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை, உ.பி.யை நான்காக பிரிக்கும் பிரச்சினை, கருப்புப் பண பிரச்சினை, காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை ரத்து செய்தல், ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி, பழைய பிரச்சினையான ஸ்பெக்ட்ரம் விவகாரம், சிஏஜியின் அறிக்கை தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்டவையும் அவையில் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

ஜன் லோக்பால் கதி என்ன?

இதுதவிர அன்னா ஹஸாரே குழுவினர் மறுபக்கம் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர். எனவே ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக இந்த கூட்டத் தொடரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மொத்தம் 21 அமர்வுகளுடன் 30 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் எத்தனை அமர்வுகளில் அமைதி நிலவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதிமுக எம்.பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று, அதிமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அதிமுக எம்பிக்கள் இந்தக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

பாஜகவுடன் இணைந்து ப.சிதம்பரத்துக்கு அதிமுகவும் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது.

English summary
Signs of a direct confrontation between the Opposition and the United Progressive Alliance (UPA) loom large over the winter session of Parliament with the BJP-led National Democratic Alliance (NDA) deciding to boycott Home Minister P Chidambaram over the 2G issue. The decision to target the home minister by not allowing him to speak either in the Lok Sabha or the Rajya Sabha till he quits, came after the meeting of the NDA leaders at the residence of senior leader L K Advani on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X