For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நலலெண்ணத்தை அழித்து விடாதீர்கள்- கேரள மக்களுக்கு ஜெ. வேண்டுகோள்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும் என்று கேரள மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார்.

கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனம் கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி எனக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனங்கள் வேண்டுமென்றே தாக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்துக்கும், கேரள அரசுகளுக்கும் இடையே உள்ள முல்லைப் பெரியாறு பிரச்சினைதான்.

இதுபோன்ற ஒரு குறுகிய மனப்பான்மையில் பிரிவு உணர்ச்சியில், சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கு யாரும் இரையாக வேண்டாம் என்று படித்த மற்றும் அறிவுள்ள இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக கற்பனையான மற்றும் அச்சுறுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள சூழ்நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அவர்களை சமுதாயத்தின் முக்கியஸ்தர்கள் சரியான வழியில் நடத்துவது அவசியம்.

முல்லை பெரியாறு அணை பலவீனமானது என்றும், பாதுகாப்பற்றது என்றும், அது உடைந்து இடுக்கி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுவதை நம்ப முடியாது. அந்த அணை சரியாக பராமரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலங்களில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அணையின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், உயர்ந்த தகுதியைக் கொண்ட நிபுணர்கள் அதை சோதித்து, அந்த அணை முழுக்க, முழுக்க பாதுகாப்பாக இருக்கிறது என்று திரும்ப திரும்ப கூறியிருக்கின்றனர். 116 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதற்காக அந்த அணை பாதுகாப்பற்றது என்று சந்தேகிக்கக்கூடாது. தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலசோழன் கட்டிய கல்லணைதான் உலகத்திலேயே அதிக வயதான அணையாகும். அது இன்னும் நிலைத்து நின்று பாதுகாப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

கிறிஸ்துவின் இறப்புக்கு பின் கட்டப்பட்ட அந்த அணை 1900 ஆண்டுகளை கடந்து முழு பாதுகாப்போடு விளங்குகிறது. கல்லணை எந்த கல்லால் (சுண்ணாம்பு கல்) கட்டப்பட்டதோ அதே கல்லால்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டு உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணை தரமான கட்டுமானத்துடன் இல்லை என்றும், அதிக பழமையாகி விட்டதால் அதன்மூலம் அச்சங்கள் ஏற்படுகின்றன என்பதும் தேவையற்ற ஒன்று.

இந்த அணை நீண்ட நாட்களாக நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில் அடிப்படையில்தான் சென்னை மாகாணத்துக்கும், திருவாங்கூர் மாகாணத்துக்கும் இடையே அப்போது இருந்த ஆங்கிலேயர் அரசு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அணை நில அதிர்ச்சி ஏற்படக்கூடிய பகுதியில் இருக்கிறது என்று சமீபத்தில் புரளி மூலம் பரவலாக பீதியை கிளப்பி உள்ளனர்.

இந்திய நில அதிர்வு வரைபடத்தை வைத்து பார்க்கும்போது, கேரளா முழுமையும் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பாகங்களும், சென்னையும் நில அதிர்வு 3-ம் மண்டலத்துக்குள் வருகின்றன. இங்கு மிதமான நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வரைபடத்தை வலைதளங்களில் எளிதாக டவுன்லோடு செய்து பார்க்க முடியும்.

அப்படி ஒரு நில அதிர்வு ஏற்பட்டால் கூட அதன் அளவு 3 ரிக்டரை தாண்டாது. 2-ல் இருந்து 2.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வை பொதுவாக உணரவே முடியாது. ஆனால் அதை பதிவு செய்யலாம். இப்படிப்பட்ட அதிர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் ஏற்படுகின்றன. இவையெல்லாம் வானிலை ஆய்வுத் துறைக்குதான் தேவையான அளவுகளாகும்.

அதுபோல் 3-ல் இருந்து 3.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வு சில நேரங்களில் உணரப்படும். அந்த அளவின்படி மிக அரிதாகத்தான் பாதிப்புகள் ஏற்படும். அந்த அதிர்வுகளும் பரவலாக உள்ளன. ஆனால், அவை கவலைக்குரியது அல்ல. இப்படி இருக்கும் நிலையில், ஒரு பெரிய நில அதிர்ச்சி ஏற்பட்டு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உருவாக்கப்படும் கற்பனையான அச்சம் அடிப்படை ஆதாரமற்றது.

இது கேரளாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனாலும், சில உள்நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் இப்படி ஒரு அச்ச உணர்வை உருவாக்கி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று கூறி வருகிறார்கள்.

தமிழகத்தின் மிக நெருங்கிய மாநிலம் கேரளா. உண்மையிலேயே 1950-ம் ஆண்டுக்கு முன்பாக 2 மாநிலங்களும் ஒன்றாக இருந்தவை. கலாச்சாரம் மற்றும் மொழி, பாரம்பரியத்தில் மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் பங்கு உண்டு.

கேரளாவில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அதேப் போலவே தமிழகத்திலும் ஏராளமான மலையாளிகள் உள்ளனர். தமிழர்களும், மலையாளிகளும் எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கேரள மக்களுக்கு எதிராக அழிவை உருவாக்கும் எண்ணம் தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ கிடையவே கிடையாது.

அந்த அணை முழு பாதுகாப்போடு இருக்கிறது என்ற உறுதியும், ஆதாரமும் இருப்பதால்தான் அப்படி சொல்கிறோமே தவிர பாதுகாப்பற்ற அணையை பாதுகாப்பான அணையாக நாங்கள் நிச்சயம் சொல்லமாட்டோம். பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் இந்த செய்தியை பொறுப்புணர்வோடும், கட்டுப்பாட்டுடனும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கேரள மக்களை மிகுந்த அக்கரையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பும் பண்பாடற்ற, நாகரீகமற்ற, நல்லெண்ணம் இல்லாதவர்களின் செயல்பாட்டுக்கு இரையாக வேண்டாம் என்பதுதான்.

காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும்.

2 மாநில மக்களுக்கு இடையே இருக்கும் இதயபூர்வமான உறவுகளை உடைக்கும் வகையில், உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

English summary
Assuring that the 116-year-old Mullaperiyar dam was safe, Tamil Nadu Chief Minister Jayalalithaa has appealed to the people of Kerala not to succumb "to the mechanisations of ill-wishers and unscrupulous mischief mongers". She also urged the political class of Tamil Nadu to desist from making inflammatory speeches that could affect cordial relations between the two states. "I make a fervent appeal to the people of Kerala not to succumb to the mechanisations of ill-wishers and unscrupulous mischief mongers. Please do not indulge in acts of senseless violence and vandalism over an imaginary non-issue," she said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X