For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு இனவெறியைத் தூண்டுகின்றன: பெ. மணியரசன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கேரளத்தில் ஆளும்கட்சி, பிரதான எதிர்க்கட்சி மற்றுமுள்ள கட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களுக்கெதிரான இன வெறியைத் தூண்டி வருகின்றன என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் திட்டமிட்டுள்ள கேரள அரசியல் கட்சிகள் மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி, கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலையை உண்டாக்கியுள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அப்பாவித் தமிழர்களை மலையாளிகள் தாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களைத் தாக்கினர். கூலிவேலைக்குச் சென்ற தமிழகப் பெண்கள் உள்ளிட்ட 500 தொழிலாளிகளை சிறைபிடித்து வைத்தனர்.

மலையாளிகளின் இனவெறியுடன் அப்பாவித் தமிழர்களுக்கெதிராக நடத்திய மேற்படி அட்டூழியங்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை எதையும் கேரள அரசு எடுக்கவில்லை.

கேரளத்தில் ஆளும்கட்சி முதன்மை எதிர்க்கட்சி மற்றுமுள்ள கட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களுக்கெதிரான இன வெறியைத் தூண்டி வருகின்றன. இந்நிலையில் கேரளத்தில் உள்ள தமிழர்களைத் தொடர்ந்து தாக்கினால், தமிழகத்தில் உள்ள மலையாளிகள் வெளியேற வேண்டும் என்றும், மலையாளிகள் நிறுவனங்களை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 7.12.2011 அன்று மலையாள நிறுவனங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தஞ்சாவூர், குடந்தை, கோவை, சென்னை, ஆகிய இடங்களில் இப்போராட்டம் நடத்திய தோழர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி, கோவை, புழல் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். ஓசூரில் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் சென்னையில் ஆலுக்காஸ் நகை மாளிகை முன் தோழர் க.அருணபாரதி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ள 6 தோழர்கள் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணை பெற்றுள்ளனர்.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூரையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக் காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது. வேண்டுமென்றே காவல்துறையினரால் சோடிக்கப்பட்டது. சைதாப்பேட்டையில் மலையாளி கடை தாக்கப்பட்டதற்கும் மேற்கண்ட 6 தோழர்களுக்கும், அத்துடன் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

மேற்படி சைதைக் கடையைத் தாக்கியவர்களைக் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது காவல் துறையினரே ஏற்பாடு செய்த தாக்குதலா? என்பது விடையளிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும்.

மலையாள இனவெறியர்களின் தக்குதலிலிருந்து தமிழ்மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் உயரிய நோக்கத்துடன் மலையாளிகளைப் பணியவைக்கும் உத்தியுடன் ‘’ மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என்று ஆர்ப்பட்டம் நடத்தியதற்குத் தமிழகக் காவல்துறை பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையிலடைத்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை த. தே. பொ.கட்சியைப் பழிவாங்குவது மட்டுமல்ல தமிழினத்திற்குச் செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

அத்துடன் கேரளத்தில் தமிழர்களைத் தாக்கும் மலையாளிகளுக்குத் தமிழகக் காவல்துறை கொடுத்துள்ள மிகப்பெரிய ஊக்கப்பரிசாகும். பத்து நாள்களுக்கு மேலாக கேரளாவில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. தமிழக அரசுப் பேருந்துகள் உட்பட தமிழர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்படுகின்றன; எரிக்கப்பட்டன.

கேரளாவில் அம்மாநில அரசும், கட்சிகளும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக இருக்கின்றன. தமிழகத்தில் தமிழர்களைக் காப்பதற்காக த.தே.பொ.க. நடத்திய போராட்டத்திற்குப் பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்குப்போடுகிறது காவல்துறை. இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தவறான பாதையில் செல்லும் காவல்துறையின் போக்கைத் தடுப்பதுடன் சைதாப்பேட்டை கடையைத் தாக்கியதாகப் போட்டுள்ள பொய் வழக்கைக் கைவிடச் செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களைத் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Desa Podhuvudamai Katchi chief P. Maniarasan has accused political parties in Kerala of kindling racial issue. He is not happy with the way TN police is handling the protesters in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X