For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டித்து போடியில் தீவைப்பு, சாலை மறியல்!

Google Oneindia Tamil News

போடிநாயக்கனூர்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளைக் கண்டித்து தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே சாலை மறியல், தீவைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. 10 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் பாரம்பரியாக வசித்து வரும் தமிழர்களை தற்போது அங்கிருந்து விரட்டியடிக்கும் விஷமச் செயலில் சில மலையாளிகள் இறங்கியுள்ளனர். போலீஸாரின் உறுதுணையோடு இந்த இன வெறி நடவடிக்கைகளில் அவர்கள் குறித்துள்ளனர்.

இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தங்களதுசொத்து சுகம் உள்ளிட்டவற்றை இழந்து, பஸ்சில் ஏறக் கூட அனுமதிக்கப்படாமல் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே தமிழகம் வந்துள்ளனர்.

இந்த அடாத செயலைக் கண்டித்து போடியிலும் போராட்டம் வெடித்துள்ளது.

போடி லட்சுமிநாயக்கன்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்கள் திடீரென போடி-உத்தமபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களை தீவைத்து கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போடியிலிருந்து தேவாரம் சாலையில் பேருந்து உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உம்மன் சாண்டி பொம்மைக்குத் தூக்கு

லட்சுமிநாயக்கன்பட்டியில் உம்மன்சாண்டியின் உருவ பொம்மை தூக்கிலிடப்பட்டது. லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரம் பகுதியிலும் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டி போடப்பட்டன. அழகர்நாயக்கன்பட்டி விலக்கு அருகே டயர்கள் எரிக்கப்பட்டன.

தமிழர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவதை கண்டித்தும், முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலையில் இருந்த மரங்களும் அகற்றப்பட்டன. உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது.

போடி ஜமாத் தலைவர் தலைமையில் 1000 முஸ்லீம்கள் உண்ணாவிரதம்

இதேபோல கேரளாவைக் கண்டித்து வியாழக்கிழமை போடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போடி நகராட்சி அலுவலகம் அருகே போடி முஸ்லீம் ஜமாத்தார்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

போடி ஜமாத் தலைவர் இனாயத் உசேன்கான் தலைமையில் 6 பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரம் பேர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் போடி சிலமலை கிராமத்தில் சிலமலை, சூலப்புரம், மல்லிங்காபுரம், மணியம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிலமலை ஊராட்சிமன் தலைவர் சத்தியபிரியா தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

போடி மேலச்சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மேலச்சொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கீழச்சொக்கநாதபுரம் கிராமங்களை சேர்ந்த 500 பேர் பங்கேறறனர்.

போடி சங்கராபுரம் கிராமத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 600 பேர் பங்கேற்றனர். இங்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் சிந்தலைச்சேரி, லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போடி லாரி சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் இந்து முன்னணி சார்பில் நகர செயலாளர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

English summary
Various people, organisations staged protests in Bodi, against the attack on Tamils in Kerala yesterday. Oomen Chandi in effigy was hanged by the villagers. Nearly 1000 Muslims were on fast in Bodi Silamali village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X