For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளத்தின் சொல்படி ஆடும் மத்திய அரசு-மன்மோகன் சிங்குக்கு வைகோ பகிரங்க கடிதம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டின் வாழ்வையே நாசமாக்க முனைந்துவிட்ட, கேரள அரசியல் கட்சிகளின் சதித் திட்டங்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக உடந்தையாகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது பகிரங்கமாகவே கேரளத்துடன் சேர்ந்து கொண்டு, தமிழகத்தை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது.

அதனால்தான், பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

பென்னி குயிக் கட்டிய நமது முல்லைப் பெரியாறு அணை, எந்த பூகம்பத்துக்கும் அசையாது, வலுவாக உள்ளது என்று, நிபுணர் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கைகள் தந்தபின்பும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2006ல் தீர்ப்புத் தந்தபின்பும், பின்னர் 2009ல், இப்பிரச்சனைக்கு ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைத்த குழு, ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தர இருக்கின்ற இந்த நேரத்தில், தந்திரத்தோடு கேரளத்தினர் வகுத்த சதித் திட்டத்தை, இந்தக் குழுவை அமைத்து மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் எழுதி உள்ள கடிதம் பின்வருமாறு:

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் குழு அமைத்தது, தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு செய்துள்ள, பொறுக்க முடியாத மேலும் ஓர் அநீதி ஆகும். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், மத்திய அரசு, 2004ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டுக்குத் துரோகங்களையே இழைத்து வருகின்றது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின் தொழில் பாதுகாப்புப் பிரிவு, கடந்த 2006 நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில், மத்திய அரசுக்குத் தந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அணைப் பகுதியில் இருந்து கேரள காவல்துறையை அகற்றி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அங்கே குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதை உங்கள் அரசு, குப்பையில் தூக்கிப் போட்டது. கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலில், அணையை உடைக்க வன்முறையாளர்கள் முயன்று வருகின்றனர்.

அணையைக் காக்க, மத்தியப் படையை அனுப்பச் சொல்லி தமிழ்நாடு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. 2006 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு வழக்கில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை முற்றிலும் உதாசீனம் செய்துவிட்டு, அணையை உடைக்கவும் எங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கேரளம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவின் இறையாண்மைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சவால் விட்டது.

தற்போது அணையின் வலிமை உள்ளிட்ட நிலைமையை உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் குழு ஆய்வு செய்து அறிக்கை தர இருக்கின்ற நிலையில் தேசியப் பேரிடம் ஆணையக் குழுவை உங்கள் அரசு நியமித்த செயல், உங்கள் அரசு கேரளாவின் சொல்படிதான் ஆடுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

இந்த அணைப் பிரச்சனையில், கேரளாவின் ஏஜெண்டாக அறிக்கை தந்து வந்த ரூர்க்கி ஐஐடி நிறுவனத்தின் பால் என்பவரை இந்தக் குழுவில் சேர்த்து இருப்பதில் இருந்தே, கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டது.

தேசியப் பேரிடர் ஆணையக் குழுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று, தமிழக முதல்வர் நியாயமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். பேரிடர் மேலாண்மை நடவடிக்கை என்ற பெயரால், மத்திய காங்கிரஸ் அரசு, இந்திய ஒற்றுமை உடையும் பேரிடருக்கே வழிவகுக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்து உள்ள இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் வைகோ.

English summary
MDMK chief Vaiko took strong exception to the setting up of an expert panel by the National Disaster Management Authority (NDMA) to prepare a contingency response plan for the Mullaperiyar dam and downstream areas when the matter was pending in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X