For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னாவின் மும்பை உண்ணாவிரதம்- எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் அரசின் லோக்பால் மசோதா வலுவாக இல்லை என்றும், அதனால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் அன்னா மற்றும் அவரது குழுவினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இன்று காலை திருத்தப்பட்ட லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் அன்னா குழுவுக்கு திருப்தியில்லை. சிபிஐ அமைப்பை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவது உள்பட 3 கோரிக்கைகளை அன்னா குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை ஏற்று வலுவான லோக்பால் மசோதா வேண்டி 3 நாட்கள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா அறிவித்திருந்தார்.

அதன்படி மும்பை பந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கினார். அவர் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்.

இந்த உண்ணாவிரத்தில் கலந்து கொள்வதற்காக அன்னா நேற்று மாலை தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் இருந்து புறப்பட்டு இரவு நேரத்தில் மும்பை வந்தடைந்தார். அங்கு மைதானம் அமைந்துள்ள பந்த்ரா பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை விருந்தினர் மாளிகையில் இருந்து ஜுஹூ கடற்கரைக்கு சென்று மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து எம்எம்ஆர்டிஏ மைதானத்திற்கு வந்தார்.

அவர் வந்த வழியில் கார்கள், பைக்குகள் அணிவகுத்து வர அன்னா தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தவாறே வந்தார். உண்ணாவிரத மைதானத்தை அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மூவர்ணக் கொடியை அசைத்து, பாரத் மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டனர். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழலுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதனால் மைதானமே அதிர்ந்தது.

பின்னர் அன்னா அங்கிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடியே அவர் அமர்வதற்காக மேடையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட உயரமான இடத்திற்கு சென்று அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

மேடை மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. உயரிய பகுதியில் அன்னா அமர்ந்திருக்கிறார். அதற்கு அடுத்த பகுதி அவரது ஆதரவாளர்கள் பேச ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு கீழ் உள்ள பகுதி நிருபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்களுக்கான பகுதியில் பலர் தேசப்பக்திப் பாடல்களை பாடினர்.

2000 போலீஸார் பாதுகாப்பு

அன்னா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் உண்ணாவிரதம் இருக்கும் மைதானத்தைச் சுற்றி 2,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மைதானத்திற்குள் வர 6 நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டிருந்தன. அத்தனை வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்தில் போலீசார் தவிர மத்திய ரிசர்வ் போலீசார், அதிரடிப்படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது.

6 அவசர வழிகள்

மைதானத்தில் அவசரமாக வெளியேற வசதியாக 6 அவசர வழிகள் திறக்கப்பட்டுள்ளன. மேடையின் பின்புறம் அன்னா ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் 12 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மைதானம் முழுக்க குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர மைதானத்தில் ஆங்காங்கே 36 நடமாடும் கழிப்பறைகள் உள்ளன.

5000 பேரே திரண்டனர்

உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் இந்த 3 நாட்களும் மைதானத்திற்கு தினமும் குறைந்தது 50,000 பேராவது வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று கிட்டத்தட்ட 5000 பேர் அளவுக்குத்தான் கூட்டம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்னா மும்பையில் உண்ணாவிரதம் தொடங்கிய அதே நேரத்தில் டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அன்னா ஆதரவாளர்கள் உண்ணாவிரத்ததை துவங்கியுள்ளனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Gandhian Anna Hazare has started his 3 day fast seeking strong lokpal bill in MMRDA grounds, Mumbai. Before starting the fast he went to Juhu beach and paid respect to Mahatma Gandhi's statue there. Security is tightened at the grounds and a 12 member medical team is stationed there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X