For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016-ல் பாமக ஆட்சிதான் - ராமதாஸின் 'பெருங்கனவு'!

By Shankar
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: வரும் 2016-ம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிதான் என்பதில் சந்தேகம் வேண்டாம், என்றார் அககட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற கொள்கை ஆவண வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடந்தது.

இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கொள்கை ஆவணத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பா.ம.க. 22 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையிலும் பா.ம.க.வின் கொள்கை என்ன? என்பதை பற்றி அதில் விளக்கி இருக்கிறோம்.

இப்போது புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறோம். இதை படித்து பார்த்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அதை தொடர்ந்து முழு ஆவணம் வெளியிடப்படும்.

2016-ல் திராவிட கட்சிகளை அகற்றி...

திராவிட கட்சிகளால் பல்வேறு சீர்கேடுகள் நடந்துள்ளது. மதுபானங்களால் கிராமங்களின் நிலை கெட்டு விட்டது. வேளாண்மை வீழ்ச்சி அடைந்துள்ளது.

வருகிற 2016-ம் ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை அகற்றி விட்டு அந்த இடத்தை பா.ம.க. பூர்த்தி செய்யும்.

மனித வளம்தான் ஒருநாட்டின் சொத்து. அதை பயன்படுத்தும் நாடுகள் முன்னேறும். ஆனால் தமிழ்நாட்டில் மதுபானம், சினிமா மோகம், இலவசத்தை கொடுத்து மனிதர்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளார்கள். திராவிட கட்சிகள் செம்மொழி ஏற்றத்திற்காக எதுவும் செய்ய வில்லை.

தமிழ்நாட்டில் 64 சதவீதம் வீடுகளில் கழிவறை கிடையாது. கேரளாவில் 4 சதவீதம் வீடுகளில்தான் கழிவறைகள் இல்லை.

தேவிகுளம், பீர் மேட்டை மீட்போம் என்று இப்போது கருணாநிதி பேசுகிறார். மொழிவாரி மாநிலங்களை பிரித்தபிறகு ஒன்றும் பேச வில்லை. கச்சத்தீவை மீட்க அவர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவில்லை. தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவதற்கு எதுவும் செய்யவில்லை.

மக்களைப் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்கள்...

மக்களை பிச்சைக்காரர்களாக்கியது தான் திராவிட இயக்கங்களின் சாதனை. பா.ம.க.வின் போராட்டம் காரணமாகத்தான் 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. சமச்சீர் கல்வியும் எங்கள் போராட்டத்தால்தான் வந்தது. சமச்சீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதே நாங்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமாவில் நடிப்பதைப் போல நடந்து கொள்ளக்கூடாது!

சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 'தகுதியில்லாத ஒருவருக்கு தலைவர் பதவி கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார் என்று முதல்வர் சொன்ன கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது.

சினிமாவில் நடிப்பதைப் போல சட்டமன்றத்தில் நடந்து கொள்ளக்கூடாது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும், அதுதான் உண்மையான ஜனநாயகம்," என்றார் ராமதாஸ்.

English summary
Dr Ramadass said that his party PMK will be the ruling party of the state in 2016. He told this in a meeting held at Thiruvannamalai last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X