For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரர் தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல் வருகிறது-ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ந்து ஜெயேந்திரர் தரப்பிலிருந்து மிரட்டல் வருகிறது. எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 மர்ம நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னையும், எனது மனைவி மற்றும் வேலையாளையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

2004-ம் ஆண்டு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு, நான் தாக்கப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.

சங்கர்ராமன் கொலையில் சம்பந்தப்பட்ட அப்புவுக்கு எனது வழக்கில் தொடர்பு இருப்பதையும், அதேபோல் அப்புவுக்கும், காஞ்சி ஜெயேந்திரருக்கும் தொடர்பு உள்ளதையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து ஜெயேந்திரர், அப்பு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். நான் தாக்கப்பட்ட வழக்கில் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை சென்னை கூடுதல் செசன்ஷ் கோர்ட்டில் 20-ந் தேதி முதல் தொடங்குகிறது. வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டு 20-ந் தேதி செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சாட்சி அளிக்குமாறு பலர் என்னை வெவ்வேறு வழிகளில் நிர்ப்பந்தம் செய்தனர். காஞ்சி மடத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டு மர்ம நபர்கள் பலர் ஆசைவார்த்தை கூறி எனக்கு அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் அவர்கள் கூறியதை கேட்கவில்லை. காஞ்சி ஜெயேந்திரருக்கு எதிராக எந்த சாட்சியமும் அளிக்கக்கூடாது என்றும், அவ்வாறு அளித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் என்னை பயமுறுத்தினார்கள். இவை அனைத்துக்கும் ஜெயேந்திரர்தான் காரணம்.

ரவுடிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் சந்தேகப்படக்கூடிய பலர் என் வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் எங்கு செல்கிறோம்? என்பதை எல்லாம் உன்னிப்பாக கண்காணித்த வண்ணம் உள்ளனர். இப்படி நடப்பதற்கு எல்லாம் காஞ்சி ஜெயேந்திரரும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களும்தான் காரணம் என்று சந்தேகப்படுகிறேன்.

இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் தகவல் தெரிவித்துவிட்டேன். ஆனால், போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த நேரத்திலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் தற்போது ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், தனது உயிருக்கு ஜெயேந்திரர் தரப்பால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Kanchi Jayendrar and his group are threatening me and my family continuously , said Auditor Radhakrishnan. He was attacked in 2002 by a gang sent by Appu, one of the accused in sankararaman murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X