தூக்கு தண்டனை கைதியை "மாவீரராக" கெளரவித்த சீக்கிய மத அமைப்பு
அமிர்தசரஸ்: தமிழ்நாட்டின் ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெற்றதைப் போல பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்கு மேடையில் நிற்கும் பல்வந்த்சிங் ரஜோனாவை காப்பாற்றுவதற்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கிலிருந்து காப்பாற்ற பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் தலைவர் அவ்தார்சிங் மக்கார் ஆகியோருக்கு சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகல் தத் ஜதேதார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவீரர்களாக கெளரவிப்பு
மேலும் பியாந்த்சிங் கொல்லப்பட்டபோது உயிரிழந்த தில்வார்சிங்கை தேசத்தின் மாவீரராகவும், தூக்கு மேடையில் நிற்கும் ரஜோனாவை வாழும் மாவீரராகவும் சிறப்பிப்பதாகவும் அந்த அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
மார்ச் 28-ல் முழு அடைப்பு
இதேபோல் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மார்ச் 28-ந் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கும் சீக்கியர்களின் மத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்களும் பெண்களும் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் பணிப்புறக்கணிப்பு செய்வதுடன் அன்றைய தினம் முழுவதும் சீக்கியர்களின் புனிதமான காவி நிற உடையை அணிய வேண்டும் என்றும் அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிஷோரி லால், பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்ட தாராசிங் ஆகியோர் மீதான வழக்குகளில் ஒரு தீர்ப்பையும் பல்வந்த்சிங் ரஜோனா வழக்கில் வேறு ஒரு தீர்ப்பையும் நீதித்துறை வழங்கியிருப்பதாகவும் அகல் தத் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூக்கு மேடையில் நிற்கும் ரஜோனா, பஞ்சாப் தனிநாடு கோரும் பப்பர் கல்சா அமைப்பைச் சேர்ந்தவர். இவருக்கு மார்ச் 31-ந் தேதி பாட்டியாலா சிறையில் தூக்கிலிட உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால் பாட்டியாலா சிறை நிர்வாகம் இதனை ஏற்க மறுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications