For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு கணக்கு புரியலை: அமைச்சர் பாய்ச்சல்!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் நியமன விவகாரத்தில் கருணாநிதி கணக்குப் புரியாமல் விமர்சனம் செய்துள்ளார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறியதையும், தற்போதைய அமைச்சர் சிவபதி, 14,000 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் எனக் கூறியதையும் குறிப்பிட்டு, '55 ஆயிரம், 14 ஆயிரமாகத் தேய்ந்தது ஏன்?' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந் நிலையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடந்தது. இதையடுத்து நிருபர்களிடம் சிவபதி கூறுகையில்,

கருணாநிதி சொல்வது போல 55,000 ஆசிரியர்கள் நியமனம் என்பது, 14,000 தேயவில்லை. இந்த 14,000 காலிப் பணியிடங்கள், நடப்பு ஆண்டில் ஏற்படும் காலிப் பணியிடங்களாகும்.

இப்போதும் சொல்கிறோம்; ஒரு ஆண்டில் 55,000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 50,230 பேரும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 7,308 சேர்த்து, மொத்தம் 57,538 பணியிடங்களை நிரப்ப 2011-12ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி குறிப்பிட்ட 14,000 பணியிடங்கள் என்பது 2012-13ம் ஆண்டில் ஏற்படும் காலியிடங்களாகும். இதைத் தான் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார். கணக்கு புரியாமல் கூறியிருக்கிறார்.

கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள் தொடங்க தாமதம் ஆகிவிட்டதால் அந்த காலி இடங்களை முழுமையாக நிரப்ப முடியவில்லை. தற்போது அனைத்து காலி இடங்களையும் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிக் கல்வித் துறையை விமர்சனம் செய்யும் கருணாநிதி, தமிழ் வளர்ச்சித் துறையை ஐந்து ஆண்டுகள் தன் வசம் வைத்திருந்த போதும், அத்துறைக்கென போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அத்துறையின் சார்பில் வெறும் இரண்டு விருதுகளை மட்டுமே வழங்கினார். ஆனால், புரட்சித் தலைவி கூடுதலாக ஐந்து விருதுகளைச் சேர்த்து, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஏழு பேருக்கு விருதுகளை வழங்கினார்.

மாணவர் நலத்திட்டங்களை கண்காணிக்க குழு:

இலவச சீருடை, காலணி, ஸ்கூல் பேக், லேப்டாப், ஜியாமெட்ரிக் பாக்ஸ் உள்ளிட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் உரிய முறையில் அவர்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க 9 இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இணை இயக்குனருக்கும் 3 மாவட்டங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

ஆசிரியர்களின் வருகை கண்காணிக்கப்படும். பள்ளிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை பெறப்படும்.

இலவச பாடப் புத்தகங்களைப் பொருத்தவரையில், மே மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டு, கோடை விடுமுறை முடிந்த பள்ளி திறக்கும் நாளான ஜுன் மாதம் 1ம் தேதி அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார் சிவபதி.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ஜூன் முதல் வாரத்தில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 8,884 இடைநிலை ஆசிரியர்களும், 25,111 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர் என்றார்.

English summary
TN school education minister Sivapathi refuted the charges of DMK chief Karunanidhi. Earlier Karunanidhi on Sunday accused ADMK government of neglecting school education, affecting the future of students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X