விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று தாயகம் திரும்பிய விஸ்வநாதன் ஆனந்துக்கு ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆடல் பாடலுடன் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் டைபிரேக்கரில் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட்டை தோற்கடித்து 5-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரது சாதனையை பாராட்டி அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற ‘செஸ் சக்கரவர்த்தி’ ஆனந்த் தனது சொந்த ஊரான சென்னைக்கு திரும்பினார். ரஷியாவில் இருந்து சனிக்கிழமை 9.15 மணிக்கு சென்னை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், செஸ் சங்க நிர்வாகிகள் ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர். ஆனந்துக்கு ஆளுயர மாலையும், மலர் கிரீடமும் அணிவிக்கப்பட்டது. அவரை வரவேற்கும் விதமாக தப்பாட்டம், ஒயிலாட்டம், மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகள், என்.ஐ.ஐ.டி. நிறுவன நிர்வாகிகள், ஊழியர்களும் திரளாக நின்று ஆனந்துக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

தமிழக அரசு சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர் ராஜ்குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஆனந்தை சந்தித்து பேச ரசிகர்களும், ஊடகத்தினரும் ஒருவரையொருவர் முந்தி கொண்டு சென்றதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

தனக்கு அளித்த வரவேற்பிற்கு ஆனந்த் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது. என்னை வரவேற்று கவுரவப்படுத்துவதற்காக இவ்வளவு ரசிகர்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசுக்கும் குறிப்பாக எனது சாதனையை அங்கீகரித்து ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சரை விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன். பள்ளிகளில் செஸ் பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பது, செஸ் விளையாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம் பல செஸ் சாம்பியன்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்” என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
World chess champion Viswanathan Anand on Saturday received a rousing welcome by his fans, who lined up in good numbers to greet him, as the chess wizard returned home after winning his fifth world title.
Please Wait while comments are loading...