85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mahi
குர்கான்: ஹரியானா மாநிலம் மானேசர் அருகில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை மஹியை கிட்டத்தட்ட 85 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் நேற்று பிற்பகல் ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிர்பாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.

அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்தனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமியால் கயிறைப் பிடித்து மேலே வரமுடியவில்லை.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே, கிட்டத்தட்ட 80 மணி நேரம் கழிந்த நிலையில் இன்று காலைதான் ராணுவம் தோண்டிய சுரங்கப் பாதை வழியாக மீட்புக் குழுவினர் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்தனர்.

இதனால் குழந்தை விரைவில் கொண்டு வரப்படுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் அதில் திடீரென தாமதம் ஏற்பட்டதால் பதட்டம் அதிகரித்தது.

சிறுமி உள்ள பள்ளத்திலிருந்து அருகாமையில் ராணுவத்தினர் தோண்டியுள்ள பள்ளத்திற்கு குழந்தையை கொண்டு செல்ல ஒரு சிறிய சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அதன் சுற்றளவு குறுகியதாக இருப்பதாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும் பிரச்சனை ஏற்பட்டது. மூச்சு விடக் கூட முடியாத நிலையில் அந்த இடம் இருப்பதால் மிகவும் மெதுவாகவே தற்போது குழந்தையை மீட்டுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக குழந்தை மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது.

குழந்தையை மீட்டுக் கொண்டு வந்தபோதே அதை துணியால் மூடிபடியதான் கொண்டு வந்தனர். இதனால் குழந்தையின் உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.

மஹியை உடனியாக ராணுவ ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மஹி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்ட நீதிபதியும் அதை உறுதி செய்து சான்றளித்தார். இதையடுத்து மஹியின் மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மஹி உயிருடன் இல்லை என்ற தகவல் கிடைத்ததும் அவளது குடும்பத்தினர், தாயார் சோனியா உள்ளிட்டோர் கதறியழுதனர். மஹியின் கிராமத்திலும் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.

மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதமே குழந்தையின் உயிர் போக காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mahi, rescued from 70 feet borewell after 86 hours of stuggle is declared dead by the doctors.
Please Wait while comments are loading...