For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் தமிழீழக் குறிக்கோளை கைவிட்டதாக கற்பனை செய்யாதீங்க..:சொல்கிறார் கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழீழம் என்ற குறிக்கோளை திமுக கைவிட்டுவிட்டதாக எவரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஆகஸ்ட் 12 மாநாடு"

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளை கோரி பெறவேண்டும் என்பதிலும்; அங்கு நடைபெற்ற ஆயுதப்போராட்டத்திற்கு பிறகு; சிங்கள ராணுவம் ஈழத்தமிழர்களை அழித்து ஒழித்திட முனைந்துள்ள இந்த நேரத்தில்; எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும்-அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தவும்-அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களை களைந்திடவும் -எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்; எதில் நாட்டம் செலுத்தலாம்; எத்தகைய ஆதரவு கோரலாம்; போருக்குப்பிறகும், ஒரு பொதுவான அமைதி அங்கே ஏற்படாமல் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் தமிழர்கள் மீது தொடர்வதைக் கண்டிக்கவும்; அவற்றிலிருந்து இலங்கையிலுள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்றவும்; அறவழியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் நாம் நடத்த இருக்கின்ற மாநாட்டின், திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.

மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதாலோ-அல்லது நிறைவேற்றப்படுவதாலோ "தமிழ் ஈழம்'' என்ற குறிக்கோளை தி.மு.க. கைவிட்டுவிட்டதாக கற்பனை செய்து கொள்ளவேண்டாம் என்று, அந்த மாநாட்டை பற்றிய விளக்கங்களை அளித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நான் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறேன்.

ஈழக் கோரிக்கை கைவிடப்பட்டதா?

ஆனால் சில செய்தி பத்திரிகைகள் மற்றும் சில நண்பர்கள் தெளிவாக நான் அளித்த அந்தப் பேட்டியையே குழப்பம் என்று குதர்க்க வாதம் செய்வதையும்; நாம் தமிழ் ஈழக்கோரிக்கையையே கை விட்டுவிட்டோம் என்பதைப்போல பேசுவதையும், எழுதுவதையும், அறிக்கைகள் விடுவதையும் காணும்போது; எந்த கருத்தை தி.மு.க. மக்கள் முன்னால் எடுத்து வைத்தாலும்; அதற்கு மாறுபட்ட கருத்தை சொல்லி குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதையோ, நமது கருத்தை கேலி செய்வதையோ வாடிக்கையாக கொண்டுள்ளவர்களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த மாநாடு பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கு நான் கூட்டிய செய்தியாளர்கள் கூட்டத்தில், "இந்த டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா?'' என்று கேட்டபோது, நான் விரிவாக அளித்த பதிலை மீண்டும் இப்போது நினைவூட்ட விரும்புகிறேன்.

தனி ஈழம்

"தனி ஈழத்தைப்பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போதே அழுத்தந்திருத்தமாக சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை. ஏனென்றால், அங்கே நடைபெற்ற ஆயுதப்போராட்டத்திற்குப்பிறகு, ஆயுதப்போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களை பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது, இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டை கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாக கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய நோக்கமாகும்''.

"தமிழ் ஈழம் இதுவரை எனது நிறைவேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன். என்னுடைய நிறைவேறாத ஆசை அதுதான். தனித்தமிழ் ஈழம் என்று முன்பு நான் சொன்னதை இப்போதும் சொல்வதற்கு தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். அதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்'' என்றும் நான் திட்டவட்டமாக என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், "பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் விவாதத்திற்கான கருத்துரு தொடர்பான அறிக்கையில் சொல்லப்படவில்லையே?'' என்று கேட்கப்பட்டபோது, "இந்த மாநாட்டிற்கு வருகின்ற பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் அறிந்த பிறகு, முடிவெடுப்பது தான் ஜனநாயகம் என்ற காரணத்தால், நான் எதையும் முன்கூட்டியே சொல்லி யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை, அது நல்லதுமல்ல'' என்றும் விளக்கியிருக்கிறேன்.

இவ்வளவிற்கும் பிறகும் ஒரு சிலர் தமிழ் ஈழத்தை கருணாநிதி விட்டுவிட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi on Wednesday reiterated there was no confusion with regard to his stand on a separate Tamil Eelam and he could not help it if some people had imagined that he had given up the cause of Tamil Eelam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X