For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி தொழில் பாதிப்பு- உற்பத்தியாளர்கள் கவலை

By Siva
Google Oneindia Tamil News

Matchsticks
தூத்துக்குடி: தீ்ப்பெட்டி தயாரிக்க முக்கிய மூலப்பொருளான மெழுகுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டுக்கு மெழுகு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கந்தக பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களில் தீப்பெட்டி தொழில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 2,500க்கும் மேற்பட்ட கையினால் செய்யப்படும் தீப்பெட்டி கம்பெனிகளும், 300க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர தீப்பெட்டி கம்பெனிகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 6 லட்சம் பேர் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள். தமிழகத்தில் தயாரிக்கும் தீப்பெட்டி பி்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, அட்டை, வஜ்ஜிரம் பொட்டாசியம் குளோரைடு, குச்சி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகம் செலவழித்து தீப்பெட்டி உற்பத்தி செய்தாலும் சந்தையில் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ஒன்று ரூ.200க்கு விற்கப்படுகிறது. மூலப்பொருட்களில் முக்கியமான மெழுகை சென்னையில் இயங்கி வரும் மெழுகு உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து வாங்கி சிட்கோ மூலம் தென்தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

இம்மெழுகை கிலோ ரூ.60க்கு உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். இயந்திரங்கள் பழுதால் சென்னையில் உள்ள நிறுவனத்தில் குறைந்த அளவே மெழுகு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு போதிய அளவில் மெழகு சப்ளை செய்ய முடியவில்லை. தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வெளிமார்க்கெட்டில் இருந்து மெழுகை கிலோவுக்கு ரூ.100 கொடுத்து வாங்குகின்றனர்.

இங்கிருந்து தீப்பெட்டி வாங்கும் வடமாநிலங்களில் பருவ மழை தொடங்கியுள்ளதால் பண்டல்கள் இருப்பு வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கு தீப்பெட்டி தேவையும் சற்று குறைந்துள்ளது. இத்தைகய நெருக்கடியான சூழ்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன், மின்கட்டண உயர்வு, லாரி வாடகை, கூலி உயர்வு போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தென்தமிழகத்தில் தீப்பெட்டி தயாரிப்பதற்கு தேவையான மெழுகு சீராக கிடைக்க வேண்டுமென்றால் வெளிநாடுகளுக்கு மெழுகை ஏற்றுமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Wax scarcity affects matchbox industries in the southern districts of Tamil Nadu. So, they want the government to ban the export of wax.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X