மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவி: உறுப்புதானம் மூலம் நால்வருக்கு வாழ்வு அளித்தார்.
சென்னை: விபத்தில் மூளை சாவு ஏற்பட்டு உயிர்போகும் தருணத்தில் இருந்த சேலம் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மரணத்தை தழுவும் நேரத்திலும் நான்கு பேருக்கு வாழ்வளித்த இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சேலம் பேர்லேண்ட்ஸ் (அழகாபுரம்) மிட்டாபுதூர் கான்வென்ட் ரோட்டில் வசித்து வருபவர் ஜேக்கப். இவர், மெய்யனூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஐஸ்வர்யா (வயது 21), சவுந்தர்யா (17) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இதில், ஐஸ்வர்யா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வந்தார். அவரது தங்கை சவுந்தர்யா, பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு கல்லூரி தேர்வு நடைபெற்றது. கடந்த கடந்த 3-ந் தேதி காலையில் தேர்வு எழுதுவதற்காக, தோழியுடன் ஐஸ்வர்யா மொபட்டில் சென்றார். உடையாபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி மொபட் மீது மோதியதில் ஐஸ்வர்யாவும், அவரது தோழியும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், ஐஸ்வர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது தோழியும் காயம் அடைந்தார். இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், ஐஸ்வர்யா மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அப்போது ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை சாவு ஏற்பட்டு அவர் சுயநினைவு இழந்துவிட்டார் என்றும், பிழைப்பது கடினம் என்றும் கூறிவிட்டனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை ஜேக்கப், தனது நண்பர்களிடம், எனது மகள் சாகப்போகிறாள். அவளது உடல் உறுப்புகளை வைத்து 4 பேராவது உயிர் வாழட்டும். உடல் உறுப்பு தானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்று தெரிவித்தார்.உடல் உறுப்புகளை தானம் செய்யும் வசதி சென்னையில்தான் இருக்கிறது என்பதால், தனி ஆம்புலன்ஸ் மூலம் ஐஸ்வர்யா சென்னை கொண்டுவரப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் ஐஸ்வர்யாவை காப்பாற்றும் பொருட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவின் பெற்றோர் விருப்பப்படி, ஞாயிறுக்கிழமை மாலை ஐஸ்வர்யாவின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, அந்த உறுப்பு குறைபாடு உள்ள 4 பேருக்கு அவைகள் பொருத்தப்பட்டன. அதன்பின்னர், உயிரற்ற ஐஸ்வர்யாவின் உடல் நேற்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஐஸ்வர்யாவின் உடல் சேலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று இரவு காகாபாளையம் மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சாவின் விளிம்பில் சென்னை வந்த ஐஸ்வர்யா, 4 பேருக்கு வாழ்வு அளித்துவிட்டு, உயிரற்ற உடலாய் சேலம் திரும்பியது, உறவினர்கள் - நண்பர்களையும் கண்ணீர் விடச் செய்தது.


Click it and Unblock the Notifications
