தேசியத் தலைவர் மட்டுமல்ல..சர்வதேச தலைவரான ராகுல் இத்தாலியிலும் போட்டியிடலாம்: நரேந்திர மோடி

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி ராஜ்கோட்டில் நடைபெற்ற விவேகானந்த யுவ பரிஷத் மாநாட்டில் பேசியதாவது:
21-ம் ஆண்டு நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுவாமி விவேகானந்தரின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டனர். இந்த நாட்டின் 60 கோடி மக்கள் 48 மணி நேரம் முழு இருட்டில் சிக்கித் தவித்ஹ்டனர். மருத்துவமனைகள் மின்சாரமின்றி மூடப்பட்டன. அப்படியானால் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு என்ன இடம் இருக்கிறது? இந்தியாவே இருளில் மூழ்கிய போது குஜராத் மாநிலம் மட்டும்தான் மின்சாரத்தில் ஒளிர்ந்தது!
காங்கிரஸ் தலைவர் சிலர் என்னை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். மோடியைப் பொறுத்தவரையில் குஜராத் மாநிலத்துக்கு மட்டுமேயான தலைவர்.. ஆனால் ராகுல் காந்தியோ தேசியத் தலைவர் என்று கூறியிருந்தனர். உண்மைதான். நான் குஜராத்துக்கான ஒரு தலைவராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களது ராகுல் காந்தி தேசியத் தலைவர் மட்டுமல்ல..ஏன் அவர் சர்வதேசத் தலைவரும் கூடத்தான். அவர் இந்தியாவில் மட்டுமல்ல.. இத்தாலி நாட்டுத் தேர்தலிலும் கூட போட்டியிட்டு வெற்றி பெறலாம்.
மத்திய அரசின் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்பது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழடித்துவிடும் என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம். உற்பத்தித் துறையில் கடுமையாக விளைவுகளை ஏற்படுத்தும். வேலையின்மையைத்தான் உருவாக்கும். 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமர் மன்மோகனை சிங்கம் என்கின்றனர். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட போது சிங்கம் என்றழைக்கப்பட்டார். இப்போது அதே அமெரிக்காவின் நிர்பந்தத்தை ஏற்று சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த போதும் சிங்கம் என்று அழைக்கப்பட்டிருக்கிறார் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுத் தந்த ககன் நரங், கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, புஜரா ஆகியோர் மோடியால் சிறப்பிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications