For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: ஒசூர் அருகே கன்னட அமைப்பினர் மறியல்; தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம்

Google Oneindia Tamil News

ஓசூர்: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தமிழக-கர்நாடக எல்லையில் நேற்றும் இன்றும் கன்னட அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வரும் 6ம் தேதி இதற்காக பந்த் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட திரைப்பட சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

காவிரி பிரச்சனை குறித்து முடிவெடுக்க கடந்த வாரம் டெல்லியில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு மாநிலங்களின் கோரிக்கையையும் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசை கேட்டு கொண்டார். அதை கண்டித்து கர்நாடக முதல்வர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநிலத் தலைவர் நாராயண கவுடா தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர், ஒசூர் ரோட்டில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி என்ற இடத்தில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு காவிரி நீரை விடமாட்டோம் என்று கோஷம் எழுப்பினர்.

முன்னதாக அத்திப்பள்ளி விரைவு சாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு சென்ற கன்னட அமைப்பினர் தமிழக எல்லைக்கு வந்தனர். பெங்களூர்-சென்னை சாலை மற்றும் சென்னை-பெங்களூர் 4 வழிச் சாலைகளிலும் மறியலில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் அந்த அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு மாநில எல்லை பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

அப்போது கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது,

காவிரி நதிப் படுகை பகுதிகளிலேயே குடிநீர் பிரச்சனை உள்ள போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட பிரதமர் உத்தரவிட்டது நியாயமற்றது. எங்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினால், ஒசூர் சாலை மட்டுமல்லாது, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் எல்லா சாலைகளிலும் மறியல் போராட்டம் நடத்துவோம்.

கர்நாடகத்தில் 2 போக விளைச்சல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 3 போக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட தமிழகத்துக்கு தர முடியாது. தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடக் கூறும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரினால், கர்நாடகத்தில் தமிழ் நாளிதழ்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்போம். தமிழ் சினிமாக்களையும், தமிழ் சேனல்கள் ஒளிபரப்புவதையும் தடுப்போம் என்றார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ எஸ்.பி (கர்நாடகா) சுரேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.அசோக்குமார் உத்தரவின் பேரில், ஓசூர் டி.எஸ்.பி கோபி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார், தமிழக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 11.30 மணிக்கு துவங்கிய மறியல் மதியம் 12.30 மணி வரை தொடர்ந்தது. இதனால் கர்நாடக மாநில போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சு நடத்தி, அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர்.

இந் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசைக் கண்டித்து, கர்நாடக எல்லையில் இன்றும் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பந்த்-சினிமா துறை ஆதரவு:

காவிரி நதி நீர் பிரச்சனையை முன்னிட்டு, வரும் 6ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட திரைப்பட துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பந்த் அன்று கர்நாடகாவில் தியேட்டர்கள் இயங்காது. மேலும் படப் பிடிப்புகளும் ரத்து செய்யப்படவுள்ளன.

பந்த்தையொட்டி, திரைப்பட துறையினர் போராட்டம் மற்றும் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மண்டியாவில் பெங்களூர் மேயர்-கவுன்சிலர்கள் போராட்டம்:

இந் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து மண்டியாவில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் பெங்களூர் மாநகராட்சி பாஜக மேயர் வெங்கடேஷ் மூர்த்தி மற்றும் கவுன்சிலர்களும் நேற்று பங்கேற்றனர்.

காவிரி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து பெங்களூர் நகரின் 198 வார்டுகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
Karnataka Rakshana Vedike supporters conducted a protest in the Karnatka-Tamil Nadu border for Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X