For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் அறிவுரையை கேட்கும் எண்ணம் எனக்கில்லை: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanaidhi
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையை ஏற்று அறிக்கைகளை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தாம் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளிலும் ஏடாகூடமான ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டையே கடைபிடிப்பதாக கூறியிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களின் நலனுக்காக அறிக்கை விடுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் கொடுக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதியும் பல்வேறு பிரச்சனைகளில் ஜெயலலிதா மேற்கொண்ட இரட்டை நிலைப்பாடுகளைப் பட்டியலிட்டு தமிழர் நலனுக்காக நாளும் எழுதுகிறேன்..அதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

கருணாநிதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புலிகள் விவகாரம்

இரட்டை நிலையை எப்போதும் கடைப் பிடிப்பவர் யார் என்பது; தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். அதற்கு சான்றாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். சில நாட்களுக் கெல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று பேரவையில் இவரே தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார்.

சசிகலா பஞ்சாயத்து

ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், சசிகலா மீது யாராவது குறை கூற முற்படுவார்களேயானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, 27-8-1996 தேதிய அறிக்கையில் சசிகலாவோடு எனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் இந்த நாள் முதல் விலக்கிக் கொள்கிறேன் என்றும் அறிவித்து விட்டு, மீண்டும் ஒரு முறை அவரை ஒன்று சேர்த்துக் கொண்ட..... இதற்குப் பெயர் இரட்டை நிலையா? நிலையில்லாத நிலையா?

காவிரி நதிநீர் ஆணையம்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதிலும், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறார். இந்தக் காவிரி நதிநீர் ஆணையம் அமையக் காரணமாக இருந்ததே நான்தான்! ஆனால் அந்த ஆணையம் பற்றி இதே ஜெயலலிதா என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா? காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டு, 11-8-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 21-8-1998 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர். ஆனால் பிரதமர் தலைமையிலான ஆணையத்துக்கு காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற விவாத அமைப்பாகத்தான் இப்புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்துக்குச் சிறிதும் பாதிப்பில்லை; பாதிக்கப்படப் போவது தமிழகம்தான் என்று சொன்னார்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் முதல் கூட்டம் 28-10-1998 அன்றும், 14-7-2000 அன்றும் டெல்லியில் நடைபெற்றது. நான் முதலமைச்சராக இருந்த போது கூட்டமும் நடைபெற்று, அதில் தமிழகத்திற்கு இவ்வாறு பலனும் ஏற்பட்டதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்?

மின்வெட்டு யாரால்?

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் வேணுகோபால் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தித் திட்டம் மூலம் அடுத்த ஆறு மாதங்களில் 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். இந்த 3000 மெகாவாட் மின்சாரம், தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கவுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால்; கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக எதுவும் செய்யவில்லை என்று திரும்பத் திரும்ப கூற மாட்டார்கள்.

கூடங்குளம் போராட்டம் தொடர ஜெ. காரணம்

கூடங்குளம் பகுதியில் 500 கோடி ரூபாய்க்கு நலத் திட்ட உதவிகளை அங்கே அமைதியான சூழ்நிலை உருவானவுடன் செய்யப்போவதாக தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். 19-3-2012 அன்று அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையிலே முடிவெடுத்து கூடங்குளத்தில் வீட்டு வசதி, - சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அதிலே இது வரை ஒரு கோடி ரூபாய் கூடச் செலவு செய்யப்படவில்லை. நான் அதைக் குறிப்பிட்டுக் கேட்ட பிறகு, அங்கே அமைதியான சூழல் ஏற்பட்ட பிறகு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்கிறார். அறிவித்தவுடன், பணிகளை மேற்கொண்டிருந்தால், அந்தப் பகுதி மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டு, அங்கே அமைதி நிலை உருவாகியிருந்தாலும் உருவாகியிருக்கக் கூடும். எனவே அங்கே போராட்டம் இந்நாள் வரை தொடர்வதற்கே ஜெயலலிதாவின் செயற்பாடுகள்தான் காரணம்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது யார்?

ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிடுவதாகவும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். யார் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார்கள், யார் குறைந்தபட்சப் பண்பாடு இல்லாமல், நாகரிகம் இல்லாமல் அறிக்கை கொடுக்கிறார்கள் என்ற முடிவுக்கு தமிழக மக்களே வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அறிக்கை விடுவது நிறுத்தமா?

தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நாளும் நாளும் எழுதுகிறேன். ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Accusing his rival and TN Chief Minister Jayalaithaa of adopting "double standards" on Key issuse, DMK leader Karunanaidhi said in the statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X