தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது புகார்கள்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதிகள் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்றபட்டவர்களாக இருக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர்மீது புகார் வந்துள்ளதாகவும் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 167 பேர் சிவில் நீதிபதிகள் வியாழக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு எம்.ஒய். இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது. உங்களுக்கு எதிராக ஊழல் புகார் சுமத்தப்பட்டால், உடனே பதவி விலகிவிடுங்கள். தற்போது நீதிபதிகள் மீதும் ஊழல் புகார் குறித்த தவறான கண்ணோட்டம் எழுந்துள்ளது. அதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். தமிழ்நாட்டில் 900 நீதிபதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக 500 புகார் மனுக்கள் உள்ளன.

ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு கமிட்டி இருப்பதுபோல், நீதிபதிகளையும் கண்காணிக்க எனது தலைமையில் கண்காணிப்பு கமிட்டி உள்ளது. நீதிபதிகளுக்கு எதிரான மொட்டை புகார்கள் மீது கவனம் செலுத்த மாட்டோம். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் தீவிரமாக கண்காணிக்கப்படுவீர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள் ஊழலுக்கு அடிபணியாதவர்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மூத்த நீதிபதிகளுக்கு மதிப்பு கொடுங்கள். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு கொடுங்கள். நீதிமன்ற அலுவல் நேரத்தில் ஒழுக்கம், கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

நீதிபதி கருத்தினால் சலசலப்பு

இன்றைக்கு ஏழை எளிய மக்கள் நீதிபதிகளை கடவுளுக்கு சமமாக மதிக்கின்றனர். நியாயம் வழங்கும் நீதிபதிகளே இன்றைக்கு லஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக தலைமை நீதிபதி ஒருவரே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்துக்கூறியுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி இத்தகைய பேச்சினை பொது இடத்தில் பேசுவதை தவிர்த்திருக்கலாம் என்றார். நீதிபதிகள் மீது புகார் இருப்பதாக கூறியுள்ளதால் பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது ஐயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras high court Chief Justice M Y Eqbal on Thursday warned subordinate judicial officers in Tamil Nadu that corruption allegations against them would be viewed seriously, and pointed out that the high court is probing about 500 petitions against judges.
Please Wait while comments are loading...