• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈழப் பிரச்சனையில் இந்தியா விட்டுக் கொடுக்கிறதோ?: ’சிலருக்கு’ சந்தேகம் என்கிறார் கருணாநிதி

By Mathi
|

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சிலவற்றில் இந்தியா விட்டுக் கொடுத்துப் போகிறதோ என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாக படுகின்ற எல்லையில்லாத, எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மை பற்றியார் குறை சொன்னபோதிலும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக்காமல், "என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்ற வகையில், 1956-ம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காகவாவது, சிலவற்றில் விட்டு கொடுத்துப்போகிறதோ இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக்கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

உதாரணமாக இலங்கை தமிழர்களை கொல்வதற்கு காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பல முறை விடுத்துள்ளோம். ஆனால் சிங்கள அரசின் அமைச்சரெ நம்மிடம் சவால் விடுகின்ற அளவிற்கு, இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்க செய்தே தீருவோம், முடிந்தால் தமிழகத்திலே உள்ளவர்கள் தடுத்துப் பார்க்கட்டும் என்கிறார்.

இந்திய அரசும் சிங்கள அமைச்சருக்கு நேரடியாக பதில் சொல்ல முன்வரவில்லை. இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. இலங்கையில் படுகொலைக்கு ஆளான பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும், இந்தியர்கள் தான் என்று ஏற்றுக்கொள்ள இந்திய அரசு இன்னமும் தயாராக இல்லைபோலும்! இந்தியாவின் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் சிங்கள அரசு, மறைமுகமாகவோ அல்லது தெரிந்தும் தெரியாமலோ சீனாவின் உதவியை, பாகிஸ்தானின் துணையை தொடர்ந்து பெற்றுக் கொண்டுதான் உள்ளது.

எந்த அளவிற்கு சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக ஒரு கட்டுரையை பிரபல பத்திரிகையாளர்கள் நிருபமா சுப்ரமணியனும், ஆர்.கே.ராதாகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார்கள். அந்த கட்டுரைக்கான தலைப்பே, "விடுதலைப்புலிகள் இறுதியாக போரிட்ட இடத்திற்கு அருகிலேயே-தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நினைவுச்சின்னம்'' என்பதாகும். அதிலே உள்ள சில செய்திகள் வருமாறு :-

"இலங்கையில் வடக்கு பகுதியின் மையத்தில் 2009-ம் ஆண்டு நடந்த உச்சக்கட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த பூமிக்கு அருகில் - அந்தப்போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றியை உணர்த்திடும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த போர் நினைவுச்சின்னம் தமிழர்களின் கண்களில் விரலை விட்டு குத்துகின்ற அளவில் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி சொன்னவர், போரின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் தன்னுடைய தந்தையை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்ததாம்.

"எவ்வளவோ தியாகங்களை செய்தும் கூட, தமிழர்களாகிய நாங்கள் எங்கிருக்கிறோம் என்றே தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று அவர் கண்ணீரோடு புலம்பினார். போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சியகமும் இலங்கை அரசின் நாகரிகமற்ற செயல். "எந்த அளவிற்கு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, இன்னமும் தமிழர்களை அவமானப்படுத்தி அடக்குவது என்ற எண்ணத்தோடு; விடுதலைப்புலிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து முப்பதாண்டுகளுக்கு மேலாக போரிட்ட இடத்திலே-அப்பாவித்தமிழர்கள் கால்நடைகளை போல வேட்டையாடப்பட்ட இடத்திலே - தங்கள் வெற்றியை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற அளவிற்கு நினைவுச்சின்னம் அமைத்து, அவற்றை அன்றாடம் நூற்றுக்கணக்கான சிங்களர்கள் வந்து பார்த்து பரவசப்படுகிறார்கள் என்பதையெல்லாம் படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது என்றால், அந்த கொடுமையை அங்கே அன்றாடம் காணுகின்ற ஈழத்தமிழர்களின் மனம் என்ன பாடுபடும்?

இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் அங்கேயுள்ள தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி வாழச்செய்யும் முயற்சிகள்தானா? உலக நாடுகள் ஒருபோதும் அங்கீகரிக்க ஒப்புக்கொள்ள முடியாத போர்க்குற்றங்கள் அனைத்தையும் மனசாட்சி உறுத்தல் சிறிதுமின்றி புரிந்து விட்டு; ஐ.நா.போன்ற சர்வதேச மன்றங்கள் கொஞ்சங்கூட சகித்துக்கொள்ளவியலாத மனித உரிமை மீறல்களை எல்லையில்லாத அளவுக்கு செய்து விட்டு; மனித மனமோ - மனிதநேயமோ சிறுதுளியுமின்றி மிகப்பெரிய இனப்படுகொலையை நிறைவேற்றிவிட்டு; பல்லாயிரக்கணக்கான தமிழ் இளம் பெண்டிரை விதவையராக்கி விட்டு; நீண்ட நெடிய வரலாறும், பண்பாட்டு பாரம்பரியமும் கொண்ட தமிழ் தேசிய இனத்தை தரணியெங்கும் தெருக்களிலே அலைய வைத்து விட்டு; போரில் வெற்றி பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டு, போலிப்பூரிப்போடு, போர் நினைவுச்சின்னம் எழுப்பியிருக்கிறது "சிங்கள பேரினவாதம்''!

ஈழத்தமிழர்களின் தியாக பூமியில் சிங்களர்கள் எழுப்பியுள்ள இந்த நினைவுச்சின்னம், உலக தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நெருப்பை கொட்டும் என்று தெரிந்தே, வேண்டுமென்றே அவர்களின் உள்ளங்களையெல்லாம் நோகச்செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இலங்கையிலே ஒற்றுமையும், அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற ஐ.நா.மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த மாதம் நாம் நடத்திய "டெசோ'' மாநாட்டிலே இந்த கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கித்தான் பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

நமது "டெசோ'' மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானங்களை தான் இந்த மாத கடைசியிலே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற கழக குழுவின் தலைவர் டி.ஆர். பாலுவும் எடுத்துச்சென்று ஐ.நா.சபையிலே ஒப்படைக்கவிருக்கிறார்கள். இதற்கு பிறகாவது, இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதா, அவர்களின் நல்வாழ்வுக்காக நாளும் நாளும் ஏங்கிக் கொண்டிருக்கும் உலகத்தமிழர்களின் துயரம் நீங்காதா என்ற ஏக்கத்தோடு தான் தாய்த்தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Sri Lankan Government has deeply hurt the sentiments of Tamils across the world by deliberately erecting a victory memorial near the place that witnessed the last leg of the war between the LTTE and Army, resulting in the death of thousands of Tamil civilians, DMK president M. Karunanidhi has said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more