• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!!

By Shankar
Google Oneindia Tamil News
US fiscal cliff
வாஷிங்டன் (யு.எஸ்): அதிபர் தேர்தல் முடிந்தவுடன், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.

அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும்.

வரி கூடும்-பொருளாதாரம் சரியும்

ஓருவேளை புதிய சட்டதிருத்தம் இயற்றப்படாவிட்டால், ஜனவரி 1ம் தேதி முதல் பழைய பில் க்ளிண்டன் காலத்து வரிவிகிதம் தானாகவே அமலுக்கு வந்துவிடும். ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் அதிக வருமான வரி செலுத்த வேண்டி வரும். புதிய சட்டம் மூலம் வருமான வரியை குறைக்கும் சட்டம் இயற்றித்தான் நிலைமையை சீராக்கமுடியும்.

என்னதான் பிரச்சனை?

அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தில் 250 ஆயிரம் டாலருக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை நிச்சயமாக உயர்த்துவோம். அதற்கு கீழே உள்ளவர்களுக்குட் தற்போதைய (புஷ் ஆட்சிக்கால) வரியே நீடிக்கும் என்று வாக்கு கேட்டு வெற்றிபெற்றார்.

அதான் ஆட்சியை பிடித்து விட்டாரே, அப்புறம் என்ன நிறைவேற்றி விட்டு போகவேண்டியதுதானே என்றால், காங்கிரஸ் சபையில் ஒபாமா கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் இல்லை. காங்கிரஸ் சபையில் நிறைவேற்றி பின்னர் செனட் சபையிலும் வழி மொழியப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே அதிபர் ஒபாமா கையெழுத்திட முடியும். செனட் சபை தீர்மானத்தை காங்கிரஸ் உறுதி செய்யவும் வழி வகை இருக்கிறது.

குடியரசுக் கட்சியின் பிடிவாதம்

பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் பழைய புஷ் காலத்து வரியே அனைவருக்கும் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதிபர் ஒபாமாவும், அவருடைய ஜனநாயகக் கட்சியினரும் அதற்கு உடன்படவில்லை. 250 ஆயிரம் வருமான வரம்பிலிருந்து 400 ஆயிரம் என, ஒபாமா தளர்த்திக் கொண்டார். மேலும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாக காங்கிரஸ் சபையில் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைவர் ஜான் பேனர் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துப் பார்த்தார். அவரது சொந்த கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். எந்த முடிவும் எட்டாமலே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு உறுப்பினர்கள் சென்று விட்டனர்.

பங்கு சந்தை வீழ்ச்சி

அரசியல்வாதிகளின் வீண்பிடிவாதம், சரியான கொள்கை முடிவு எடுக்க முடியாத அரசு என்ற அவப்பெயருடன், நிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். தொழில் நிறுவனங்களில் மூதலீடு செய்வதை குறைத்துக் கொள்வதுடன் வேறு நாடுகளுக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை நிறுத்தி வைக்கவும் செய்வதால், பொதுமக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு, சேமிப்பு அதிகரிக்கும். சந்தையில் விற்பனை குறையும், மீண்டும் பொருளாதார தேக்க நிலைக்கு கொண்டு போய்விடும் என வல்லுனர்கள் கடுமையாக எச்சரித்து வந்துள்ளனர்.

மீண்டும் பேச்சு வார்த்தை

இந்நிலையில் இன்று, காங்கிரஸ் சபை மற்றும் செனட் சபையின் இரு கட்சி தலைவர்களையும் ஒபாமா அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முன்னேற்றமாக இருப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒபாமாவும் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செனட் சபையில் இரு கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் இயற்ற முயற்சி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த தீர்மான நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் சபையின் ஒப்புதல் பெற்று திங்கள் இரவுக்குள் அதிபர் ஒபாமா கையெழுத்திடவேண்டும். உடனடித் தீர்வுக்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பரபரப்பான காட்சிகளுடன் அமெரிக்க அரசியல் களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது. கூடவே பொருளாதார வல்லுனர்களும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்!

English summary
President Barack Obama and congressional leaders have agreed to make a final effort to prevent the US from going over the "fiscal cliff".
 
 A meeting between the two sides on Friday set off intense bargaining over tax rates as the New Year deadline looms
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X