For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலைக்கே காசு கொடுக்க முடியாதவரிடம் ரூ. 28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் வந்தது எப்படி?

By Chakra
Google Oneindia Tamil News

Ramilingam
கோவை: தாராபுரத்தில் கடலை வியாபாரியிடம் இருந்து வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்தப் பணம் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (47) என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின.

இதையடுத்து இவரது வங்கி லாக்கரில் இருந்து 5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.

கடலை வியாபாரியான ராமலிங்கம் கச்சா எண்ணெய் தொழிலில் ஈடுபட அனுமதி கேட்டு பெட்ரோல் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இவர் இடம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்தத் தொழிலில் ரூ. 1.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிப்பதாகவும் வருமான வரித்துறையினரிடம் கூறி, அவர்களை மயக்கமடையச் செய்துள்ளார்.

ஒரு சாதாரண டூபாக்கூர் புரோக்கரான ராமலிங்கத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ராமலிங்கம் கடலை மற்றும் தேங்காய் கொப்பரை வியாபாரம் செய்து வந்ததோடு பங்கு சந்தையிலும் பரிவர்த்தணை செய்து வந்தவர். மேலும் ரியல் ஏஸ்டேட் போன்ற துறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனாலும் இந்த அளவுக்கு அவரிடம் பணம் குவிந்தது மர்மாக உள்ளது.

இது நிச்சயமாக அரசியல்வாதிகளின் ஊழல் பணமாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது போக தொழிலதிபர்கள் கணக்கு காட்டாமல் பதுக்கிய கருப்புப் பணமும் இதில் இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது. இதையடுத்து அந்த அமைப்பினரும் வருமான வரித்துறையினருடன் இணைந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந் நிலையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க பத்திரங்கள் போலியானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. ஏனெனில் அமெரிக்க கருவூலத்துறை இவ்வளவு பெரிய தொகைக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுவதையும், காகிதத்திலான பத்திரங்களை வினியோகிப்பதையும் ஏற்கனவே நிறுத்தி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், இவரிடம் பிடிபட்ட ரூ. 28,000 கோடி மதிப்பிலான பத்திரங்களும் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டவை என்பதும், அவை ஒவ்வொன்றும் 5,500 கோடி ரூபாய் முக மதிப்பு கொண்டவை என்றும் தெரிகிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம், 20 முதல் 30 ஆண்டுகள். சில பத்திரங்கள் மட்டுமே 2013ல் முதிர்வடைகின்றன.

இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இத்தாலியில் 6 டிரில்லியன் மதிப்புள்ள போலி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் ராமலிங்கத்திடம் இருந்ததும் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைக் காட்டி கருப்பு பண ஆசாமிகளிம் ராமலிங்கம் ஏமாற்றி பணம் வாங்கியிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தான் தனது கனவுத் திட்டம் என்று ராமலிங்கம் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். எனவே தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக போலியான பத்திரத்தை தயாரித்து பலரையும் ஏமாற்றி இவர் பணம் கறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவரிடம் வருமான வரித்துறையினரும் அமலாகப் பிரிவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்திரங்களின் உண்மைதன்மையை பரிசோதிக்க மும்பையில் உள்ள வருமான வரித்துறையின் தடவியல் ஆய்வகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவைப் பிரிவுதான் இந்த பத்திரங்கள் உண்மையானவையா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால், அந்தப் பிரிவை அணுகுவதற்கான வேண்டுகோள் கடிதத்தை தருமாறு மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தையும் அதிகாரிகள் அணுகியுள்ளனர்.

இதற்கிடையே ராமலிங்கத்தின் உறவினர்களின் வீடுகள், ஒரு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினரின் விசாரணையின்போது பிரேசிலை சேர்ந்த டேனியல் என்பவர்தான் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களைத் தன்னிடம் தந்ததாகவும், இதை மாற்றி கொடுப்பதன் மூலம் தனக்கு கணிசமான தொகை கமிஷனாக கிடைக்கும் என்றும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டில் மன்னார்குடியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் நிலக்கடலை வாங்கிய வகையில், பணம் கொடுக்க முடியாததால் நிலத்தைத் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி நடக்காததால், கலியபெருமாள் தாராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதில் ராமலிங்கம் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராமலிங்கம் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ராமலிங்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். வெளியாட்களிடம் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறி கோர்ட் மூலம் திவால் நோட்டீஸ் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாங்கிய கடலைக்கே காசு கொடுக்க முடியாதவரிடம், திவால் ஆன ஒருவரிடம் ரூ. 28,000 கோடி பத்திரங்கள் இருந்தது தலை சுற்ற வைக்கிறது.

English summary
While the Income Tax department is probing the authenticity of U.S. treasury bonds seized from a person in Tirupur, legal experts have expressed doubts over the genuineness of the documents, as well as the legality of an individual holding such high-volume bonds in the name of investment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X