• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கு தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் : பொத்தாம் பொதுவாக கருணாநிதி கருத்து!

By Mathi
|

Karunanidhi
சென்னை: நாட்டின் சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்பதே தமது நீண்டகால கருத்து என்று திமுக தலைவர் கருணாநிதி பொதுவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு, வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு, பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு என்றெல்லாம் சொல்லப்படுகிற நிலையில் பொதுவாகவே தூக்கு தண்டனையை நீக்கக் கோருகிறவன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

பலாத்கார சம்பவங்கள்

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பெண்கள் மீதான கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்தபோது நான் அதற்காக வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ழைப்பெண்களும் ஆளாக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என்னுடைய இந்தக் கருத்தையொட்டியே வர்மா கமிஷன் பரிந்துரைகளும் அமைந்து, அதாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய்வோருக்கு ஆயுள் தண்டனை என்று கூறப்பட்டிருந்தது.

அதிதீவிர தமிழக அரசு

ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரையில் இந்த பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலையத்தில் பெயருக்கு ஒரு வழக்குப் பதிவு என்ற அளவிலேதான் இருந்து, டெல்லிச் சம்பவத்திற்குப் பின்னர் இந்த ஆட்சியினரும் கூட, தீவிரமான கருத்துக் களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரசாயன ரீதியில் ஆண்மையைப் போக்க வேண்டுமென்றெல்லாம் அறிவித்திருந்தார்கள்.

தொடரும் பலாத்காரங்கள்

ஆனால் அதற்குப் பிறகும் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நின்ற பாடில்லை. கோவையில் 13 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் குற்றம் செய்ததால் மாணவியின் தாய்மாமன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவத்திற்கு மாதர் சங்கம் போன்ற பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி 17-2-2013 தேதிய நாளேடுகளில் வந்துள்ளது. மேலும் அன்றைய நாளிதழிலேயே தர்மபுரி மாவட்டத்தில், பொம்முடி அருகே கடந்த 14ஆம் தேதியன்று 16 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகச் செய்தி வந்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேதான், பண்பாட்டுக் கும், நாகரிகத்துக்கும் முற்றிலும் எதிரான இந்தக் குற்றங்களைப் புரிவோருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய கேள்விகளும் எழுகின்றன. மத்திய அரசு, வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகளுக்கு மேல் ஒருபடி சென்று, அவர்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றே அறிவித்துள்ளது. தூக்குத் தண்டனை என்பது தற்போது இந்திய அரசியலில் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

ராஜிவ் வழக்கில் திமுக நிலை

பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையைப் பற்றி கேள்வி எழுந்த நேரத்திலே கூட, "பொதுவாகவே தூக்கு தண்டனையே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு தண்டனை பற்றியும் ஏற்கனவே கழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தேன்.

வீரப்பனின் கூட்டாளிகள் வழக்கு

இதற்கிடையே வீரப்பனின் நண்பர்களான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு விசாரணை நடத்திய மைசூர் தடா நீதி மன்றம் ஆயுள் தண்டனைதான் அவர்களுக்கு விதித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த காரணத்தால்தான், உச்சநீதிமன்றம் இந்த நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றி 2004ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்து ஒன்பதாண்டு காலமாக இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்தக் கருணை மனுவினை இந்தியக் குடியரசுத் தலைவர் நீண்ட கால நிலுவைக்குப் பிறகு, கடந்த 11ஆம் தேதியன்று நிராகரித்த நிலையில், தற்போது அவசர அவசரமாக அவர்களைத் தூக்குத் தண்டனைக்கு ஆளாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது பற்றிய செய்திகள் ஏடுகளில் வந்து கொண்டுள்ளன. அந்த நான்கு பேரின் சார்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கக் கோரியும் உச்சநீதி மன்றத்தில் 16-2-2013 அன்று மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் காலின் கன்சால்வஸ், சமிக் நாராயண் ஆகியோர் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி திரு. அல்டமாஸ் கபீர் அவர்களின் இல்லத்திற்கே சென்று இந்த மனுவினை தாக்கல் செய்து, உடனடியாக அதன் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்கள், அந்த நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் போடப்படலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மனு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

மறுவிசாரணை கோரிக்கையை அலட்சியப்படுத்த முடியாது

தலைமை நீதிபதி அவர்களின் இந்த அறிவிப்பினையொட்டி தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பல முனைகளிலும் நாடெங்கிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, புதன்கிழமைவரை அவர்களைத் தூக்கிலிட, உச்சநீதிமன்றம் இடைக் காலத்தடை விதித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும், வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று வீரப்பனின் துணைவியாரே கூறியிருக்கிறார். தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரும் அவர்களை நிரபராதிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். 1993ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் வேண்டுமென்றே வழக்கு தொடுக்கப் பட்டதாகவும், எனவே சி.பி.ஐ. மறுவிசாரணை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வைத்துள்ள கோரிக்கை அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை பொறுப்பிலே உள்ளவர்கள் மனதிலே கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பு

உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு திரிவேணிபென் என்பவருக்கும் குஜராத் மாநிலத்திற்குமிடையே நடைபெற்ற ஒரு வழக்கில் ஏற்கனவே அளித்தத் தீர்ப்பில், "இந்திய அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின்படி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு காரணமில்லாமல் மிகுந்த கால தாமதம் ஏற்படுமானால் துhக்குத் தண்டனை விதிக்கப் பட்டவர் உச்ச நீதி மன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம்" என்று குறிப்பிட்டிருந்ததை இப்போது எடுத்துக் காட்டுகிறார்கள்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒன்பதாண்டு கால தாமதம் ஏற்பட்டிருப்பதால் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நால்வரும் உச்ச நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோருவதற்கு உரிமை உள்ளது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் ஆணை நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதாகும்" என்று உச்சநீதி மன்றம் கேகர்சிங் என்பவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் இப்போது எடுத்துக் காட்டப்படுகிறது.

கிருஷ்ணய்யர் கருத்துதான் என் கருத்து

மேலும் உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசர் திரு. வி.ஆர்.கிருஷ்ண அய்யர் அவர்கள் இந்த நால்வரின் தூக்குத் தண்டனை பற்றி தெரிவித்திருக்கும் கருத்துகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும். "சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டும் என்று அரசு அதிகாரத் தில் உள்ளவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் செயல்படுத்தும் தூக்குத் தண்டனை என்பது அரசாங்கமே செய்யும் கொலைக்கு சமமானதே அன்றி வேறல்ல. அரசாங்கமே செய்யும் இத்தகைய கொடுங்குற்றங்களுக்கெதிராக இந்திய நாட்டு மக்கள் அணி திரள வேண்டும். அரசியல் சட்டம் வழங்கியுள்ள "வாழும் உரிமையை அரசாங்கம் தன்னிச்சையாக தூக்கியெறிய அனுமதிக்கக் கூடாது. உலகின் 90 சதவிகித நாடுகள் துhக்குத் தண்டனையை ஏற்கனவே ரத்து செய்துவிட்டன. இந்திய நாடும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து இது காந்தி தேசம் என்பதை உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று திரு.கிருஷ்ண அய்யர் அவர்கள் தெரிவித் திருக்கும் கருத்துகளைத்தான் நான் பல்லாண்டு காலமாகச் சொல்லி வருகிறேன்.

தூக்கை அகற்றுவது பற்றி பரிசீலியுங்கள்

இன்றைய நிலையில் இந்தக் கருத்துகளை மத்திய அரசும், சட்ட வல்லுநர்களும், நீதி மன்றங்களும் சீர்தூக்கிப் பார்த்து மனித உரிமைகளையும் மனித நேயத்தையும் போற்றக் கூடிய வகையில் தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றி விடுவது பற்றி தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கருத்து ஏற்கனவே உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டிருக்குமானால், இப்போது தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வரும் தூக்குத் தண்டனைகள் நிகழாமலேயே தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Former Tamil Nadu chief minister and DMK chief M Karunanidhi on Monday called for the abolition of death penalty. The leader issued a statement saying had the long-pending demand for the abolition of death penalty been obliged, executions happening now could have been avoided.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more