• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜபக்சேவின் மனித உரிமை மீறல் இந்தியாவுக்கு இன்னுமா புரியவில்லை? .. கருணாநிதி வேதனை

|

Karunanidhi
சென்னை: உலக நாடுகள் எல்லாம் சிங்களத்தின் சர்வாதிகாரச் சதிகாரரை உணர்ந்துள்ள சூழலில், நெஞ்சில் நஞ்சும் முகத்தில் நட்பு வேடமும் பூண்டுள்ள, இலங்கையை மத்திய அரசு எப்போதுதான் புரிந்து கொள்ளுமோ? என்று கேட்டுள்ளார் திமுக கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நிலைமைகள் முற்றிய போதிலும்; வாழ்வாதாரத்தை இழந்து - வாழ்வுரிமைகளைப் பறிகொடுத்த ஈழத் தமிழர்களின் வரலாறு காணாத தொடர் இன்னல்களை, இந்திய அரசு இன்னமும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை.

குறிப்பாக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூடப் பூசி மெழுகத்தான் பார்த்திருக்கிறார். அதிலே, இலங்கையுடனான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது; அங்கு இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றம் செய்வது, புனர்வாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அமைதியான கவுரவமான சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று கூறப்பட்டிருப்பதனைத்தும் வெறும் சொற்றொடர்களே தவிர, தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிக்கும் கருத்துகளாக இல்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொண்டவரைப் போல இந்திய அரசிடம் காட்டிக் கொள்வதும், இந்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதும், அதே நேரத்தில் அந்த உதவிகளை ஈழத் தமிழர்களுக்குப் பயன்படுத்தாமல், சிங்களவர்களுக்கே பயன்படுத்துவதும், தமிழ்ப் பெயரிலே உள்ள ஊர்களை எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றுவதும், தமிழர்க்குரிய கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்குவதும், தமிழர்களின் நிலம், வீடு மற்றும் பாரம்பரிய உடைமை களையெல்லாம் பறித்துக் கொள்ளும் சிங்களவர் ஆக்கிரமிப்பையும் - வெறித்தனமான சிங்களமயமாக் கலையும் ஊக்குவிப்பதும் போன்ற இனவெறிச் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.

பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் பற்றி ஒரு கதை உண்டு. அதில் மெய்ப்பொருள் நாயனாரைக் கொலை செய்வதற்காக முத்தநாதன் என்ற குறுநில மன்னன் வருவதை, சேக்கிழார் வர்ணிக்கும்போது,

"மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கயினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே யென்ன மனத்தினுள்கறுப்பு வைத்துப் பொய்தவவேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்" என்று பொருத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது மெய்ப்பொருள் நாயனார் எனும் மன்னரைக் கொலை செய்ய வேண்டுமென்று சதித் திட்டம் தீட்டிய முத்தநாதன் என்ற குறுநில மன்னன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, முனிவர்களைப் போல முடியை இழுத்து மாற்றிக் கட்டிக் கொண்டு, தவ வேடமணிந்து கையில் புத்தகங்களும், புத்தகங்களுக்கு இடையே கத்தியையும் வைத்துக்கொண்டு, அரண்மனைக்குள் நுழைகிறான்; அப்படி நுழையும்போது மனத்தில் கொலைசெய்ய வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் நுழைந்ராதான் என்பதைச் சேக்கிழார், விளக்கு எரியும்போது திரியின் நுனியில் ஒளியும், திரியின் அடியில் கரியும் இருப்பதைப் போல வெளியிலே தவ வேடமும், உள்ளே கொலை செய்யும் கெட்ட நோக்கமும் கொண்டு நுழைந்தான் என்கிறார்.

போரில் எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்ற நிலையில், தவ முனிவர் வேடமணிந்து ஏமாற்றிக் கொல்ல முற்பட்ட முத்தநாதனைப் போல, சிங்கள அதிபர் ராஜபக்சே இந்திய அரசுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக நடித்து, தனக்குத் தேவையானதையெல்லாம் சாதித்துக் கொண்டு; அதே நேரத்தில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

மனித நேயத்திற்கு எதிரான - மனித உரிமைகளுக்குப் புறம்பான அவரது கொடுங்கோன்மைச் செயல்பாடு களை உலக நாடுகள் எல்லாம் புரிந்து கொண்டு ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

உலக நாடுகள் எல்லாம் சிங்களத்தின் சர்வாதிகாரச் சதிகாரரை உணர்ந்துள்ள சூழலில், நெஞ்சில் நஞ்சும் முகத்தில் நட்பு வேடமும் பூண்டுள்ள, இலங்கையின் மைபொதி விளக்கை மத்திய அரசு எப்போதுதான் புரிந்து கொள்ளுமோ? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK president Karunanidhi expressed anger over Centre's attitude towards Sri Lanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more