விவேகானந்தர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவை செய்கிறேன்: ஜெயலலிதா

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று முதல் ஒரு ஆண்டுக்கு தமிழகத்தில் நீடிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பிறந்தநாள் கொண்டாட்ட துவக்க விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயலலிதா விழாவைத் துவங்கி வைத்து சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
பின்னர் சுவாமி விவேகானந்தரின் புகைப்பட தொகுப்பு நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது,
இந்த இல்லம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராமகிருஷ்ண மடம் துவங்கியதில் இருந்து முதல் 9 ஆண்டுகள் அது இங்கு தான் இயங்கியது. சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில் 9 நாட்கள் தங்கி வீர உரையாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட இல்லத்தில் இருந்து உங்கள் முன் உறையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பிறருக்காக வாழ்ந்த விவேகானந்தர் மற்றும் அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கைள் மீது எனக்கு சிறு வயதில் இருந்தே அதிக ஈடுபாடு உண்டு. என் இல்லத்தில் உள்ள நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவற்றை நான் அடிக்கடி படிப்பேன். அனைவரிடமும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமத்துவமாக வாழ்வதே சிறந்தது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவர் மறைவுக்கு பிறகு மக்களுக்கு தொண்டு செய்யுமாறு மன்னர்களை வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டில், 'சகோதர, சகோதரிகளே' என்று துவங்கிய அவரின் பேச்சு உலக மக்களை கவர்ந்தது. 1897ம் ஆண்டு உலக நன்மைக்காக தொண்டும், துறவும் என்ற நோக்கத்தில் சுவாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்டது ராம கிருஷ்ணா மிஷன். சுயநலத்தை தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.
சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது தான் தொண்டு. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவி செய்வதையே போதிக்கின்றன. அதனால் தான் நம் நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டுகள் பல வகைப்படும். நாட்டுக்கு செய்யும் சேவை தேசத் தொண்டு. மக்களுக்கு செய்யும் சேவை மக்கள் தொண்டு. இறைவனுக்கு செய்யும சேவை திருத்தொண்டு. இந்த 3 சேவையையும் செய்யும் நிறுவனமாக ராமகிருஷ்ண மடம் உள்ளது என்றால் அது மிகையாகாது.
நான் அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக இருந்தார் என்று கூறினால் அது மிகையாகாது. 1982ம் ஆண்டில் நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதே சுவாமி விவேகானந்தர் பற்றி ஒரு பேட்டியிலே குறிப்பிட்டேன். சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள் சேவை செய்தார். நான் அவர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவை செய்து வருகிறேன். எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று யாரும் கிடையாது, எதவும் தேவையில்லை. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான்.
தமிழக மக்களால் நான், தமிழக மக்களுக்காகவே நான். ராமகிருஷ்ண மடத்தின் மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளை நன்கு அறிந்தவள் நான். ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் அரசுக்கு சொந்தமான இந்த விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தையும், அதன் அருகில் உள்ள காலி இடத்தையும் நீண்ட கால குத்தகைக்கு விடுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், இந்த விவேகானந்தர் இல்லமும், அதன் அருகில் உள்ள காலி இடமும் ராமகிருஷ்ணா மடத்திற்கு 99 ஆண்டு கால குத்தக்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications