For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் மோசடி: பி.ஆர். பழனிச்சாமி மீது மேலும் 5 புதிய வழக்குகள்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி கிரானைட் அதிபர் பழனிச்சாமி மீது மேலும் 5 புதிய கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்துள்ளதாக பி.ஆர்.பி. நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சுமார் 16000 கோடி அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்திருக்கலாம் என்ற கலெக்டர் சகாயத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு இது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியது.

அரசு அனுமதித்த அளவை விட கூடுதல் கற்களை திருட்டுத்தனமாக எடுத்தது, அனுமதி பெறாத இடங்களில் குவாரி நடத்தியது, அரசு புறம்போக்கு இடங்கள், பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தது உள்ளிட்ட 72 வழக்குகள் கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை புறநகர் போலீசில் வழக்கு பதிவாகியுள்ளது.

இதில் பி.ஆர்.பி. கிரைனைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் எதிராக மட்டும் 41 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பழனிச்சாமி, அவரது மகன் உள்ளிட்ட பலர் கைதாகி சிறையில் இருந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று பி.ஆர்.பி. நிறுவனம் மீது புதிதாக 5 வழக்குகளை மதுரை மாவட்ட போலீசார் பதிவு செய்துள்ளனர்.

நரசிங்கம்பட்டி பொது கிணறு மற்றும் கோவில் நிலங்களில் சட்டவிரோதமாக அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக அந்த ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரிலும், நாவினிப்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தில் அத்துமீறி கற்களை வெட்டி எடுத்ததாக வி.ஏ.ஓ. மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரிலும் கீழவளவு போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

சுட்டிபனையன் ஊரணியை ஆக்கிரமித்ததாக அந்தப் பகுதி விவசாயிகள் கொடுத்த புகார், பஞ்சபாண்டவர் குளத்தை ஆக்கிரமித்ததாக அந்தப் பகுதியினர் கொடுத்த புகார், கல்லாங்குத்து கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் வெட்டி எடுத்ததாக வி.ஏ.ஓ. கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் 3 வழக்குகள் மேலூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பி.ஆர்.பி. நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ராட்சத கிரானைட் கற்கள் அனைத்தையும் அளவிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கணக்கெடுப்புப் பணியை முடித்துவிட்டு, பொது ஏலம் மூலம் கிரானைட்களை விற்க அரசு முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
Five fresh criminal cases were registered on Saturday against granite tycoon P.R. Palanichamy of PRP Exports, his family members and relatives in the multi-crore granite quarrying scam in Madurai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X