For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் பேசும் பாமக குரு...: ஜெயலலிதா தாக்கு

By Mathi
Google Oneindia Tamil News

TN assembly discuss on Marakkanam Violence
சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ குரு இன்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டசபையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:

பாமக எம்.எல்.ஏ. குரு: சித்திரை முழு நிலவு விழாவையொட்டி நடந்த கலவரத்துக்கு நாங்கள் காரணம் அல்ல. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 500 கி.மீ. தூரத்தில் இருந்து மக்கள் வந்திருந்தனர். அவர்கள் வரும் வழியில் வேறு எங்கும் கலவரம் நடைபெறவில்லை. மரக்காணத்தில்தான் கலவரம் நடைபெற்றது. (இவ்வாறு கூறிவிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது குற்றம் சாட்டிப் பேசினார்)

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கிட்டு): இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனுமதி பெற்று இங்கு பேசுபவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க பேசுகிறார்கள். ஆனால் உறுப்பினர் குரு குற்றச்சாட்டுகளை கூறி பேசுகிறார். எந்த அடிப்படை ஆதாரமுமின்றி அவர் கூறியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

(இதைத் தொடர்ந்து குரு கூறிய குற்றச்சாட்டுகள் சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்)

குரு: எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சொல்ல வேண்டாமா?. 2 பேர் இறந்துள்ளனர்.

ஜெயலலிதா: உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறலாம். இதில் இறந்தவர்கள் விபத்தில் இறந்தார்களா? இல்லை வேறு மரணமா? என்பதை கூற வேண்டியது போலீஸ்தான். காயம்பட்டவர்கள் யார்-யார் என்பதையும் போலீசார்தான் விசாரித்து சொல்ல முடியும். ஆனால் இவர்களே ஒரு முடிவுக்கு வந்து பேசினால் எப்படி?

குரு: நாங்கள் தவறு செய்யவில்லை. கலவரம் குறித்து நீதி விசாரணை வைக்கட்டும். எங்கள் மீது தவறு என்றால் எப்படிப்பட்ட தண்டனையும் ஏற்கத் தயார்.

ஜெயலலிதா: சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள் யாரும் மரக்காணம் சம்பவத்திற்கு பா.ம.க தான் காரணம் என யாரும் கூறவில்லையே. அப்படியிருக்கையில், குருவின் பேச்சு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.

குரு: நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டீர்கள்.

சபாநாயகர் தனபால்: ஆதாரம் இன்றி பேசினால் எப்படி?. நீங்கள் குற்றச்சாட்டு கூறுவதைத்தான் அவை குறிப்பில் இருந்து நீக்குகிறோம்.

(இதற்கு பாமக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்).

சபாநாயகர்: இங்கு ஆதாரம் இன்றி எந்த குற்றச்சாட்டு கூறுவதையும் அனுமதிக்க முடியாது. வெளியில் மேடையில் பேசுவதுபோல் இங்கு பேச முடியாது. இது சட்டமன்றம்.

குரு: மாநாட்டுக்கு வந்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். அது விபத்தா? கொலையா? என அரசு கண்டுபிடிக்க வேண்டும். 500 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. மரக்காணத்தில் கடந்த 2002ம் ஆண்டும் வன்முறை நடந்துள்ளது. அங்கு தொடர்ந்து இதுபோல் சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து தனி நீதி விசாரணையோ, அல்லது சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. எந்த விசாரணை வைத்தாவது உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகள் நாங்கள்தான் என்றால் எந்த தண்டனையும் ஏற்கத் தயார்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஜாதி வெறியை தூண்டும் வகையில் மாநாட்டில் எம்.எல்.ஏ. குரு பேசினார். டி.வியிலும் அதைப் பார்த்தோம்.

முன்னதாக இந்த விவாதத்தில் பேசிய தேமுதிக எதிர்க் கட்சித் துணைத் தலைவரான
பண்ருட்டி ராமச்சந்திரன், மரக்காணத்தில் இரு வகுப்பினரிடையே நடைபெற்ற மோதல் கவலை தரக்கூடியதாகும். இந்த சம்பவத்தில் யார் குற்றம் இழைந்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய முதலமைச்சரை பொறுத்தவரை அவர் ஜாதியை பார்க்க மாட்டார். நீதியைத்தான் பார்ப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தவறு செய்தவர்கள் யார் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களை வளரவிடக்கூடாது. 1987ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அனைத்து ஜாதி தலைவர்களையும் அழைத்துப் பேசி சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியது போல நம்முடைய முதலமைச்சரும் அவர்களை அழைத்துப் பேசி உரிய முடிவு காண வேண்டும் என்றார்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ..கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

English summary
Tamilnadu Assembly to dicsuss on Marakkanam violence on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X