For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் மீது பாயும் நூற்றுக்கணக்கான வழக்குகள்: முதற்கட்டமாக 34 சம்மன்களை அனுப்பிய அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Govt issues summons to Dr.Ramadoss in 34 cases
சென்னை: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக 34 வழக்குகளில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு அரசு சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை பெருவிழா மாநாட்டில் பங்கேற்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்றனர். அப்போது மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது.

இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சில இடங்களில் பஸ் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதற்கு நூறு கோடி ருபாய்க்கு மேல் நஷ்ட ஈடு கோரி அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக 34 வழக்குகளில் ஆஜராகுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அவர் தங்கியுள்ள தைலாபுரம் தோட்டத்தில் சம்மன் வழங்கப்பட்டது.

வானூர் வட்டாட்சியர் கோபால்சாமி இச் சம்மனை வழங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் இல்லாததால் அவரது அலுவலக உதவியாளர் அனந்தகிருஷ்ணன் இச் சம்மனை பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக வரும் 23-ம் தேதி மாலை 4 மணிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வரும் 24-ம் தேதி மாலை 3.30 மணிக்கும், எழிலகம், சேப்பாக்கத்தில் உள்ள முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மேலும் தொடர்ந்து அவருக்கு சம்மன்கள் வழங்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வெடுத்துவரும் டாக்டர் ராமதாஸ் இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவாரா என்பது 23ம் தேதி தெரியவரும்.

English summary
Tamil Nadu government has issues summons to P.M.K. Founder Dr.Ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X