For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவுக்கு வயசு 25....!

Google Oneindia Tamil News

PMK turns 25
சென்னை: பாமக நிறுவி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை:

சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கத்தில், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் 16.07.1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தேன்.

அன்று முதல் இன்றுவரை இந்த லட்சியங்களை எட்டவும், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தவும், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்கவும் பா.ம.க. துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து துணை நகரம் அமைக்கும் திட்டம், சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் ஆகியவற்றை முறியடித்து லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்க ளின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தது தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுவதற்கு காரணமாக இருந்தது மக்களை சீரழிக்கும் சாலையோர மதுக்கடைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது என எண்ணற்ற நன்மைகளை மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

1998 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய அரசில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. உலகமே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படையையே மாற்றியமைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழக மருத்துவத் திட்டங்களுக்கும் எந்த அரசும் செய்யாத வகையில் மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது,

சேலம் மற்றும் மதுரையில் டெல்லி எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவமனைகள், பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்ததுடன், புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்ட காரணமாக அமைந்தது, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதை இல்லாமல் அனைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கியது, சேலம் ரயில்வேக் கோட்டம் அமைத்தது என பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தமிழக நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவை.

1989-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ம.க.வின் வளர்ச்சி தடைபட்டது.

இதை உணர்ந்துதான் இனிவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதென 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இனிவரும் தேர்தல்களில் திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் உறுதியாக உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி அதன் 25-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், அது சந்தித்து வந்த சோதனைகள் சுக்கு நூறாக சிதறுவது உறுதி. வெள்ளிவிழா ஆண்டு நாம் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தளமாக அமையும். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நலனுக்கு எவையெல்லாம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி கருதியதோ, அவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படாமல் தான் உள்ளன.

46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச்சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் காலம் இட்ட கட்டளைப்படி 2016-ம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி, திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK has turned 25 years in existence. Party founder Dr Ramadoss has released a statement on this occasion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X