For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவை மீட்கக் கோரி கருணாநிதி வழக்கு- ஜெ. கடும் கண்டனம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவை மீட்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி மனுத்தாக்கல் செய்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மும்முரம் காட்டி வருகின்றன. தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கச்சதீவு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்த துரோகங்கள் என்று கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘நீண்ட' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திமுக தலைவர் கருணாநிதி மேற்கொள்ள தவறிய நடவடிக்கைகளை ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி; இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்குப் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய போது, தமிழக அரசின் சார்பாகவோ அல்லது தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசின் சார்பாகவோ, தமிழகத்திற்கு சாதகமான ஒரு மனுவினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்காத கருணாநிதி; "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்ற பழமொழிக்கேற்ப கச்சத் தீவு மீட்பு குறித்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது" தும்பை விட்டு வாலை பிடிக்கும்" கதையாக உள்ளது.

1974-ல் முதல்வராக இருந்ததே கருணாநிதிதானே

1974-ல் முதல்வராக இருந்ததே கருணாநிதிதானே

இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவு, கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்டது. இவ்வாறு இலங்கைக்கு கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பு, இதைத் தடுப்பதற்குத் தேவையான எவ்வித நடவடிக்கையையும் அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி எடுக்கவில்லை.

பெருபாரி வழக்கு

பெருபாரி வழக்கு

மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க இந்திய அரசு முயன்ற போது, அப்போதைய குடியரசுத் தலைவரின் வினாவினை அடுத்து உச்ச நீதிமன்றம், "இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்" என 1960ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

கருணாநிதியின் முதல் துரோகம்

கருணாநிதியின் முதல் துரோகம்

இதனால் பெருபாரி, கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்படுவது தடுக்கப்பட்டு, இன்று வரை இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த வழக்கை மேற்கோள் காட்டி கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு ஒன்றை தொடுத்திருப்பாரேயானால், மத்திய அரசின் கச்சத் தீவு தாரைவார்க்கும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை. கச்சத் தீவு பிரச்னையில் தமிழகத்திற்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு கருணாநிதி இழைத்த முதல் துரோகம் இது.

2வது துரோகம்

2வது துரோகம்

இதே பெருபாரி வழக்கினைச் சுட்டிக் காட்டி, கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அந்த வழக்கில் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். ஆனால், கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசின் சார்பில் தமிழகத்திற்கு சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசு ஒரு ‘Proforma Respondent' தான் என்பதால், மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தவர் தான் தி.மு.க. தலைவரும் அன்றைய முதல்வருமான கருணாநிதி. இது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த இரண்டாவது துரோகம்.

மத்திய அரசு எதிர்மனு- 3 வது துரோகம்

மத்திய அரசு எதிர்மனு- 3 வது துரோகம்

குறைந்த பட்சம், தான் தாங்கிப் பிடித்து இருந்த மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, வற்புறுத்தி, ஒரு அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டிற்கு சாதகமான முறையில் பதில் மனுவை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கலாம். இதையும் கருணாநிதி செய்யவில்லை. கருணாநிதி மத்திய அரசிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை; மத்திய அரசு 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்து, என்னுடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த மூன்றாவது துரோகம்.

அரசியல் ஆதாயம் தேடுகிறார்

அரசியல் ஆதாயம் தேடுகிறார்

கச்சத் தீவு பிரச்னையில் இது போன்ற தொடர் துரோகங்களை இழைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி,"ஒப்புக்குச் சப்பாணி" போல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது நகைப்புக்குரியது, கேலிக் கூத்தானது, எள்ளி நகையாடத் தக்கது. காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கச்சத் தீவை தாரைவார்த்தது செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டால், இந்த வெற்றியும் எனக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இது போன்ற சந்தர்ப்பவாத நடவடிக்கையை கருணாநிதி எடுத்திருக்கிறார் போலும்!

1991 முதல் தொடர் நடவடிக்கை

1991 முதல் தொடர் நடவடிக்கை

என்னைப் பொறுத்தவரையில், 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் கச்சத் தீவினை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவிலேயே "கச்சத்தீவினை மீட்போம்" என்று சூளுரைத்தேன். கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் முன்மொழியப்பட்டு, 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமரை நேரிலும், கடிதங்கள் மூலமும் பல முறை வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற என்னுடைய அறைகூவலை தொடர்ந்து ஏகடியம் பேசியவர் கருணாநிதி.

எதை மீட்டுகிறார் என கொச்சை

எதை மீட்டுகிறார் என கொச்சை

"ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்டேத் தீருவேன் என்றாரே? ஏன் இன்னும் மீட்கவில்லை? அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?" என்று கச்சத் தீவு மீட்பைப் பற்றி பல முறை கொச்சைப்படுத்தி கேலியும், கிண்டலுமாகப் பேசியவர் கருணாநிதி.

நிரந்த குத்தகை முயற்சி

நிரந்த குத்தகை முயற்சி

நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, "Lease in Perpetuity", அதாவது நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு பெற்று, அதன் வாயிலாக தமிழக மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என பாரதப் பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டுள்ளேன். மூன்றாவது முறையாக 2011ல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்,
2008 ஆம் ஆண்டு என்னால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தேன். இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.

துரும்பை கூட கிள்ளிப் போடலையே

துரும்பை கூட கிள்ளிப் போடலையே

இதனைத் தொடர்ந்து, 3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இந்திய நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை 1974 ஆம் ஆண்டைய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தேன். ஆனால், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த போது கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்ததில்லை.

அலட்சியம் காட்டியவர்

அலட்சியம் காட்டியவர்

1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டத் தருணத்தில், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் "கச்சத் தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே? உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டதற்கு, "அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி. வழக்கு தொடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டியும், வழக்குத் தொடராமல் அலட்சியமாக விட்டுவிட்டார் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

விளக்கம் கொடுங்க..

விளக்கம் கொடுங்க..

கருணாநிதி நினைத்திருந்தால், தமிழக அரசின் சார்பில் அப்போதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அப்பொழுதே வழக்கு தொடுக்காதது ஏன் என்பது குறித்து கருணாநிதி தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அன்று சொன்னது என்ன?

அன்று சொன்னது என்ன?

மேலும், கச்சத் தீவு பிரச்சனை தொடர்பாக 1974 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே பேசும் போது, "ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27 ஆம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன் ..." என்று பேசியுள்ளார் கருணாநிதி.

இன்று சொல்வது என்ன?

இன்று சொல்வது என்ன?

ஆனால், பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பின் சார்பில் 15.4.2013 அன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடநப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனை கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி, அந்த ஷரத்துகள் சேர்க்கப்பட்டன..." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், தனக்குத் தெரிந்தே, தனது ஒப்புதலுடனேயே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.

தவறை மூடி மறைக்க முயற்சி

தவறை மூடி மறைக்க முயற்சி

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத கருணாநிதி, ஆட்சி அதிகாரம் பறி போன பிறகு, அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே டெசோ அமைப்பை புதுப்பித்து கூட்டங்களை நடத்துவது; அந்த அமைப்பின் மாநாட்டில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்; தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி.

கபட நாடகம்

கபட நாடகம்

"வீழ்வது தமிழர்களாக இருப்பினும், வாழ்வது கருணாநிதி குடும்பமாக இருக்கட்டும்" கருணாநிதியின் இது போன்ற பல கபட நாடகங்களை தமிழக மக்கள் கண்டு வெறுத்துப்போய், சலிப்பு அடைந்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, "ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை" என்று கூறினார். ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசிலிருந்து வெளியேறியதாக தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதி, விலகிய ஒரு சில நாட்களிலேயே, "தி.மு.கழகம் மத்திய அரசிலிருந்து வெளியேறி விட்டதால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டுவந்து விட்டதா?" என்ற கேள்விகளை எழுப்பியதன் மூலமும்; பின்னர், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, "காங்கிரஸோடு ஒட்டியிருந்த தன்னை வெட்டிவிட்டது யார் என்று விரிவாகப் பேச விரும்பவில்லை" என்று தெரிவித்ததன் மூலமும்; மத்திய அரசிலிருந்து தான் வெளியேறியது ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

சுயநலத்தின் உச்சகட்டம்

சுயநலத்தின் உச்சகட்டம்

இது போன்ற மக்களை ஏமாற்றுகின்ற, அரசியல் சந்தர்ப்பவாத கபட நாடகங்கள், கண்துடைப்பு நாடகங்கள், மக்கள் மத்தியில் இனி எடுபடாது என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். "வீழ்வது தமிழர்களாக இருப்பினும், வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்" என்பதற்கேற்ப, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனான உறவை "கூடா நட்பு கேடில் முடியும்" என்று கூறி உறவை முறித்துக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே, தன் மகளின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக மீண்டும் காங்கிரஸிடம் கருணாநிதி மன்றாடியது சுயநலத்தின் உச்சக் கட்டம்.

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது!

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது!

தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் கச்சத் தீவு வழக்கை தாக்கல் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால், தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, தமிழக மக்கள் தக்கப் பாடம் கற்பிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று கூறியுள்ளார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa has condemned DMK leader Karunanidhi on Katchatheevu row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X