For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றைய அரசியல் சூழல் காரணமாக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Present political situation compels us to protest , says Karunanidhi
சென்னை: இன்றைய அரசியல் சூழல் காரணமாக இலங்கை பிரச்சினை, சேது சமுத்திர திட்டம் உள்பட பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கருணாநிதி கூறி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

‘‘டெசோ'' இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்துகின்ற எந்த நிகழ்ச்சியும் எந்த உள்நோக்கத்தோடும் நடத்தப்படுவதில்லை. ஏன், கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் ‘‘டெசோ'' இயக்கத்தின் சார்பில் நடத்திய ‘‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' எந்த உள்நோக்கத்திற்கும் இடம் தராமல் நடத்தப்பட்ட மாநாடுதான்.அந்த மாநாட்டினை அ.தி.மு.க. அரசின் தடைகளையெல்லாம் கடந்து நாங்கள் நடத்திய போதும், மாலையில் நடைபெற்ற ‘‘டெசோ'' மாநாடும், அதனையொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கமும் நடைபெறவே நடைபெறாது என்றும், அப்படியே நடைபெற்றாலும் வெளிநாட்டிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ, வட மாநிலங்களிலிருந்தோ இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் ஆர்வமும், அக்கறையும் உடைய யாருமே கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், கருணாநிதி ஏமாறப்போகிறார் என்றும் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை அள்ளிப்பூசுகின்ற அளவிற்கு அந்த ‘‘டெசோ'' மாநாடு மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் ஈழத்தமிழர்களுக்கு பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்தது.

மத்திய அரசு பதில் மனு

கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடைபெற்ற ‘‘டெசோ'' கூட்டத்தில், கச்சத்தீவினை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை என்றும், எனவே 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை பிரகடனப்படுத்தவும், ‘‘டெசோ'' அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் என் பெயரிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

காமன்வெல்த் மாநாடு

இந்த வரிசையில் கடந்த 16-ந்தேதி ‘‘டெசோ'' கூட்டம் நடைபெற்று, அதிலே இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள ‘‘காமன்வெல்த்'' மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இந்த தீர்மானங்களின் மீது இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், ‘‘டெசோ'' இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8-ந்தேதியன்று தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் ‘‘தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்'' நடத்துவதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அரசியல் சூழல்

நமது இயக்கத்தில் சார்பில் இவ்வாறு இலங்கை பிரச்சினைக்காகவும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், ஏனைய பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென்று தலைமையின் சார்பில் முடிவெடுத்து அறிவித்து வருகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளை இன்றுள்ள அரசியல் சூழலில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர் உறவு என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவாகும். அவர்களுக்காக ‘‘டெசோ'' இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 8-ந்தேதி நடத்த வேண்டிய ஆர்ப்பாட்டத்தை எப்போதும் போல் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்திடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே இருக்கிறது. சென்னை மாநகரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்கவிருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்திடும் வரை, நமது அறவழிப்பயணம் நிற்காது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

English summary
DMK President Karunanidhi told that the present political situation compells him to protest for many causes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X