For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்கள் தாக்குதல்: இலங்கை தூதரை அழைத்து கடுமையாக கண்டியுங்கள்- பிரதமருக்கு ஜெ. கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa urges PM to summon Sri Lanka envoy
சென்னை: டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கூறி அவரை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் கடந்த 30, 31-ந் தேதிகளில் மீன் பிடிக்க சென்றபோது நடுக்கடலில் அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். 30-ந் தேதி நாகை மாவட்டம் பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இருந்தனர்.

அவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் பைப், அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த அந்த 5 மீன வர்களும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 30-ந் தேதி அன்று 3 எந்திர படகுகளில் பெட்ரோ முனையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக சிறை பிடித்து சென்றுவிட்டனர்.

மீண்டும் 31-ந் தேதி 2 படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து செய்யும் இந்த அட்டூழியம் மற்றும் சட்ட விரோத கைது நடவடிக்கைகள் சமீபகாலமாக அடிக்கடி நடப்பதை வேதனையுடன் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருப்பதால் தான் இலங்கை கடற்படையினர் துணிச்சலாக இத்தகைய அடாவடி செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

தமிழக மீனவர்களை பாதுகாக்கும் விஷயத்தில் உயர் தூதரக தொடர்புகள் இருந்தும் கூட மத்திய அரசு தனது கடமையை செய்யாமல் தவறி இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நான் பல தடவை இது தொடர்பாக உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

அந்த கடிதங்களில் இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் விஷயத்தில் நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி உள்ளேன்.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவு துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கூறி அவரை கடுமையாக கண்டிக்க வேண்டும். அதோடு இந்தியாவின் அழுத்தமான எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமுதாய மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாங்கள் உடனே தலையிட்டு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa on Friday urged Prime Minister Manmohan Singh to summon the Sri Lankan High Commissioner and convey India’s strong protest on the arrest of Indian fishermen by the Sri Lankan Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X