For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஐஏஎஸ் அதிகாரி துர்காவை 41 நிமிடங்களில் பணியிடை நீக்கம் செய்ய வைத்தேன்'

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னௌ: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை 41 நிமிடங்களில் சஸ்பெண்ட் செய்ய வைத்தேன் என சமாஜவாதி கட்சி மூத்த தலைவரான நரிந்தர் பாட்டி கூறியுள்ளது உ.பி மாநிலத்தில் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான துர்கா சக்தி நாக்பால் (28), உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை ஆட்சியராக உள்ளார். கௌதம புத்தர் நகர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுத்ததற்காக, கடந்த ஜூலை 27ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் நரிந்தருக்கு நெருக்கமானவர்கள்.

"உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் மசூதியின் சுற்றுச்சுவரை இடிக்க துர்கா உத்தரவிட்டுள்ளார். இதன்அடிப்படையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் அகிலேஷ் கூறியிருந்தார்.

40 நிமிடங்களில் சஸ்பென்ட்

துர்காவின் பணியிடை நீக்கத்தை மாநில அரசு நியாயப்படுத்தி உள்ள நிலையில், கெளதம புத்தர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நரிந்தர் பாட்டி ,"ஐஏஎஸ் அதிகாரியின் நடவடிக்கை தொடர்பாக, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு புகார் செய்தேன். 11 மணிக்கு அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துர்கா மீது புகார் கூறிய 40 நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை'' என கூறிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கண்டனம்

ஐஏஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு தாம் காரணமல்ல என கடந்த 2 நாள்களுக்கு முன்பு, நரிந்தர் கூறியிருந்தார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பணியிடை நீக்கத்துக்கு தாம்தான் காரணம் என அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொழுகை நடத்துவதற்காகத்தான் மசூதியைச் சுற்றி சுவர் கட்டப்பட்டது.இதற்கு அனுமதி பெறவில்லை என வேளாண்மைத் துறை தலைவராக பொறுப்பு வகிக்கும் நரிந்தர் தெரிவித்துள்ளார்.இவரது இந்தக் கருத்து சமாஜவாதி கட்சிக்கு தருமசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றிப் பேசிய நரீந்தர்

இதற்கிடையே, விடியோ காட்சி குறித்து நரிந்தர் கூறுகையில், ""ஊடகங்கள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன. மசூதியின் சுற்றுச் சுவரை இடிக்க துர்கா உத்தரவிட்டதால், மத ரீதியான பிரச்னை எழக்கூடும் என்று முதல்வரிடம் தெரிவித்தேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் நான் தெரிவித்தேன். அதிகாரியின் பணியிடை நீக்க உத்தரவை மாநில அரசுதான் பிறப்பித்தது'' என்றார்.

இவரது இந்தக் கருத்தை சமாஜவாதி கட்சியும் நியாயப்படுத்தி உள்ளது. மத ரீதியான பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதல்வருக்கு தெரிவிக்க வேண்டியது கட்சியினரின் கடமை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் கண்டனம்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

ஐஏஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் தொடர்பான உண்மை வெளிப்பட்டு விட்டது என பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவாமி பிரசாத் மெளரியா கூறியுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை தவறான அறிக்கை வெளியிட்ட முதல்வர் அகிலேஷ், தார்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுவிஷயத்தில் மத்திய அரசும், மாநில ஆளுநரும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

பாஜக கண்டனம்

பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி கூறுகையில், ""வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மீது உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

ஐஏஎஸ் அதிகாரி துர்கா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அகிலேஷ் யாதவ் நியாயப்படுத்துகிறார். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த நரிந்தரோ, துர்கா பணியிடை நீக்கத்துக்கு தான்தான் காரணம் என கூறியிருப்பது முரண்பாடாக உள்ளது என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் விஜய் பகதுர் பதக் கூறியுள்ளார்.

கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரை அடிப்படையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதும், பணியிடை நீக்கம் செய்வதும் மோசமான நடவடிக்கை. கெளதம புத்தர் நகர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார் பதக்.

English summary
SP leader Narinder Bhati has landed in a controversy after a video purportedly showed him as claiming that he had got UP IAS officer Durga Shakti Nagpal, who clamped down on the mining mafia, suspended in "41 minutes".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X