மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
Recommended Video
வாகன ஓட்டிகள் போராட்டத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சமரசம் செய்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

கப்பலூர் டோல்கேட்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் சுங்கச்சாவடி ஒன்று கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை மட்டும் பயன்படுத்தி கடந்து செல்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் டோல்கேட் ஊழியர்கள் அடிக்கடி வாகனங்களை மறித்து சுங்கவரி கேட்பதும், அதை எதிர்த்து வாகன ஓட்டிகள் போராட்டம் செய்வதும் நடைபெற்று வந்தது.

ஆட்சியர் உத்தரவு
இந்நிலையில் இது தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்திற்கு செல்ல, உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதேபோல் ராஜபாளையம், டி.கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதால் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் திருமங்கலத்தில் வசிக்கும் மக்களிடமும் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

வாகன ஓட்டிகள் போராட்டம்
இதையடுத்து உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டி.கல்லுப்பட்டி மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கடந்த 2 நாட்களாக கட்டாயமாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. வாகன ஓட்டிகளின் கேள்விகளுக்கு செவிசாய்க்கவில்லை எனக் கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள், லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோர்ட்டை உத்தரவை மீறி வசூல்
திருமங்கலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமே சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும், அந்த உத்தரவை மீறும் வகையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டம் 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்ததால் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஸ்டிரைக் வாபஸ்
பின்னர் பிரச்சனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சுமூக முடிவு எட்டப்படும் என திருமங்கலம் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அதுவரை கட்டடணம் வசூலிப்பார்கள் என்றும் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications