பிரபாசின் ஆதிபுருஷ் படத்தை விட செலவு கம்மி.. சந்திரயான் 3.. லோ பட்ஜெட்டில் உருவாக்கி சாதித்த இஸ்ரோ
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இறக்கி இந்தியாவின் இஸ்ரோ சாதித்துள்ளது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இந்தியா செய்த வரலாற்று சாதனைக்கு ஆன மொத்த செலவீனமே பல பெரிய பட்ஜெட் படங்களின் செலவை விட குறைவுதான்.
நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் இஸ்ரோவும் இந்த நாடுகளின் வரிசையில் உள்ளது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியிருந்த இஸ்ரோ, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. தனது சாதனை பயணத்தின் மற்றொரு பயணமாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து நிலவில் கால் பதித்துள்ளது. ஒட்டு மொத்த தேசமும் இஸ்ரோவின் இந்த சாதனையை கொண்டாடி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் எந்த ஒரு நாடும் இதுவரை ஆய்வு மேற்கொண்டது இல்லை என்ற நிலை இருந்ததை இஸ்ரோ மாற்றி அமைத்துள்ளது. இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனைதான் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.
பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதி புருஷ் படத்தின் பட்ஜெட்டை விட சந்திராயன் விண்கலம் திட்டத்தின் மொத்த செலவு கம்மி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம் இதுதான் உண்மைங்க.. ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் 700 கோடி ரூபாய்.. ஆனால் சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தின் மொத்த செலவே வெறும் ரூ.615 கோடிதான். இதை அப்படியே டாலருக்கு மாற்றினால் 75 மில்லியன் டாலராக வருகிறது.
சில ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு குறைவாக உள்ளது. அதாவது, அண்மையில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிசில் கலெக்ஷனை குவித்து வரும் பார்பி படத்தின் பட்ஜெட் 145 மில்லியன் டாலராகும். அதுமட்டும் இன்றி கிறிஸ்டோபர் நோலனின் 'Oppenheimer' படத்தின் பட்ஜெட்டே 100 மில்லியனுக்கும் மேல்.. இவ்வளவு ஏன் இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்டோபர் நோலன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் இண்டெர்செல்லர், இந்த படம் தயாரிப்புக்கு அப்போதே 165 மில்லியன் செலவு ஆனது.
இப்படி திரைப்படங்களின் பட்ஜெட்டை விட குறைந்த செலவீனத்தில் தயாரித்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்து உலகையே பிரம்மிக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படங்களை விடுங்கள்.. சில போயிங் ரக விமானத்தின் விலையை விட சந்திரயான் விண்கலத்தின் செலவு குறைவுதானாம். புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது. அண்மையில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 737 மேக்ஸ் விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது.
இந்த விமானம் ஒவ்வொன்றின் விலை மட்டும் 128.25 மில்லியன் டாலர் ஆகும். இப்படி விமான விலையை விட குறைவான விலைக்கு இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து மனித குலத்திற்கே பயன்படக் கூடிய பல்வேறு முக்கிய தரவுகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நெட்டிசன்கள் பலரும் படங்களை இப்படி பல கோடியில் தயாரித்து பட்ஜெட்டை வீணடிப்பதற்கு இதுபோன்ற அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிடலாம் எனவும் நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications